டேவிஸ் கோப்பை டென்னிஸ் ராம்குமார் வெற்றி, யுகி பாம்ப்ரி தோல்வி


டேவிஸ் கோப்பை டென்னிஸ் ராம்குமார் வெற்றி, யுகி பாம்ப்ரி தோல்வி
x
தினத்தந்தி 16 Sep 2017 9:04 PM GMT (Updated: 16 Sep 2017 9:04 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் வெற்றி கண்டார். யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.

எட்மண்டன்,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் வெற்றி கண்டார். யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.

‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக சுற்றுக்கான ‘பிளே–ஆப்’ ஆட்டத்தில் இந்தியா–கனடா அணிகள் மோதின. இந்த ஆட்டம் கனடாவில் உள்ள எட்மண்டன் நகரில் நடந்து வருகிறது.

இதன் ஒற்றையர் பிரிவில் முதல் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 154–வது இடத்தில் இருக்கும் 22 வயதான ராம்குமார் (இந்தியா), 202–ம் நிலை வீரரான பிராட்லீ ஸ்னூரை (கனடா) எதிர்கொண்டார்.

ராம்குமார் வெற்றி

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையை சேர்ந்த ராம்குமார் 5–7, 7–6 (7–4), 7–5, 7–5 என்ற செட் கணக்கில் பிராட்லீ ஸ்னூரை வீழ்த்தி இந்திய அணிக்கு 1–0 என்ற கணக்கில் முன்னிலை தேடிக்கொடுத்தார். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 3 மணி 16 நிமிடம் நீடித்தது. ராம்குமாரின் சிறப்பான ‘செர்வ்’ அவரது வெற்றிக்கு வழிவகுத்தது. இந்த ஆண்டுக்கான டேவிஸ் கோப்பை போட்டியில் ராம்குமார் இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை. தனது 5 ஆட்டங்களிலும் அவர் தொடர்ந்து வெற்றி கண்டுள்ளார்.

யுகி பாம்ப்ரி தோல்வி

2–வது ஒற்றையர் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 157–வது இடத்தில் உள்ள யுகி பாம்ப்ரி (இந்தியா), 51–ம் நிலை வீரர் டெனிஸ் ‌ஷபோவாலோவ்வை (கனடா) சந்தித்தார். ரபெல் நடால் உள்ளிட்ட முன்னணி வீரர்களை சமீபத்தில் வீழ்த்தி ஆச்சரியம் அளித்த ‌ஷபோவாலோவ்வுக்கு, யுகி பாம்ப்ரி கடும் சவால் அளிக்கும் வகையில் ஆடினார்.

முதல் 2 செட்களையும் இழந்த யுகி பாம்ப்ரி, பின்னர் சுதாரித்து ஆடி அடுத்த 2 செட்களையும் தனதாக்கினார். இதனால் ஆட்டம் 5–வது செட் வரை நீடித்தது. கடைசி செட்டில் ‌ஷபோவாலோவ் ஆதிக்கம் செலுத்தியதுடன் வெற்றியையும் சொந்தமாக்கினார். முடிவில் யுகி பாம்ப்ரி 6–7 (2–7), 4–6, 7–6 (8–6), 6–4, 1–6 என்ற செட் கணக்கில் ‌ஷபோவாலோவ்விடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டம் 3 மணி 52 நிமிடம் நீடித்தது.

சமநிலை

இந்த வெற்றியின் மூலம் கனடா அணி 1–1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் மகேஷ்பூபதி கருத்து தெரிவிக்கையில், ‘நமது அணி வீரர்கள் இருவரும் கடுமையாக போராடினார்கள். கனடா அணிக்கு இன்னும் நெருக்கடி தொடருகிறது. இதேபோல் நமது அணி வீரர்கள் போராடினால் எதனையும் நம்மால் சாதிக்க முடியும்’ என்றார்.


Next Story