டென்னிஸ்

காலில் காயம்: சானியா மிர்சாவுக்கு ‘ஆபரேஷன்’ + "||" + Leg injury Operation for Sania Mirza

காலில் காயம்: சானியா மிர்சாவுக்கு ‘ஆபரேஷன்’

காலில் காயம்: சானியா மிர்சாவுக்கு ‘ஆபரேஷன்’
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்படுகிறது.
கொல்கத்தா,

கொல்கத்தாவில் காட்சி டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை 31 வயதான சானியா மிர்சா நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது வலது கால்முட்டியில் சில பிரச்சினைகள் உள்ளன. சாதாரண முறையில் நடந்தால் வலி இல்லை. ஆனால் ஓடும் போதோ அல்லது விளையாடும் போதோ பயங்கரமான வலி ஏற்படுகிறது.

மருத்துவரை சந்தித்து ஆலோசித்த போது, ‘ஒரு மாதம் ஓய்வில் இருங்கள். அதன் பிறகு எந்த மாதிரி உணர்கிறீர்கள் என்று பார்க்கலாம்’ என கூறினார். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் வலி குறைந்தபாடில்லை. அனேகமாக இதற்கு ஆபரேஷன் தான் தீர்வாக இருக்கும். காயம் குணமடைய நிச்சயம் சில மாதங்கள் ஆகும். எனவே அடுத்த மாதம் மெல்போர்னில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் என்னால் விளையாட முடியாது.

மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு திரும்பி என்னால் முன்பு போலவே விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதே போல் அடுத்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

விராட் கோலி, அனுஷ்கா சர்மா நீண்ட காலம் பழகி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தது நல்லதே. அவர்கள், தங்களை ஊடகம் மொய்ப்பதை நன்கு அறிவர். அதை தவிர்க்கத் தான் இத்தாலிக்கு சென்று திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஏதாவது ஒரு கட்டத்தில் ஊடகத்தினரை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும். பிரபலங்களின் திருமணங்கள் என்றாலே எப்போதும் இது மாதிரியான சிக்கல்கள் வரத்தான் செய்யும்.

அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்ல முடியுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் வருகிற 21-ந்தேதி நான் துபாய்க்கு புறப்பட இருக்கிறேன்.

இவ்வாறு சானியா கூறினார்.