டென்னிஸ்

டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா - உருக்கமான உண்மைக்கதை + "||" + Tennis player Maria Sharapova - Tough True story

டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா - உருக்கமான உண்மைக்கதை

டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா  - உருக்கமான உண்மைக்கதை
“ரஷியாவின் பழைய விமானம் ஒன்றில் அன்று நான் என் தந்தை யூரி ஷரபோவாவின் கையை பிடித்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தேன்.
“ரஷியாவின் பழைய விமானம் ஒன்றில் அன்று நான் என் தந்தை யூரி ஷரபோவாவின் கையை பிடித்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 6 வயது. மாஸ்கோவில் இருந்து கிளம்பிய விமானம் அயர்லாந்தில் உள்ள ஷானன் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப இறங்கியபோது நான் அயர்ந்து தூங்கி விட்டேன். என் தாயை பிரிந்து நான் வெளிநாடு செல்வது அதுதான் முதல் முறை. பிரிவின் ஏக்கம் என்னுள்ளே இருந்துகொண்டிருந்தது. என் தந்தை, அவரது அருகில் இருந்த ரஷிய முதிய தம்பதிகளிடம் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.

மறுநாள் அதிகாலையில் அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் எங்கள் விமானம் தரையிறங்கியது. அங்கே எங்களை வரவேற்று அழைத்துச்செல்ல ஒருவர் வருவார் என்றும், அவர் எங்களை புளோரிடாவில் உள்ள டென்னிஸ் பயிற்சி அகாடமிக்கு அழைத்துச்செல்வார் என்றும், ரஷிய பயிற்சியாளர் கூறியிருந்தார். ஆனால் விமான நிலையத்தில் எங்களைத் தேடி யாரும் வரவில்லை. அமெரிக்கா எங்களுக்கு அறிமுகம் இல்லாத நாடு. என் தந்தைக்கு ரஷிய மொழியைத் தவிர வேறு எதுவும் தெரியாது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த எங்களைப் பார்த்த அந்த ரஷிய முதிய தம்பதியினர், அவர்கள் அறைக்கே எங்களை அழைத்துச்சென்றனர். அங்கு தரையில் போர்வை ஒன்றை விரித்து நாங்கள் தூங்கினோம்..” என்று சுய சரிதையில் தனது உண்மைக் கதையை விளக்கியுள்ளார், மரிய ஷரபோவா!

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான மரிய ஷரபோவா விளையாட்டில் கிடைத்த வெற்றிகள் மூலம் பெருங்கோடிகளை குவித்தவர். சாதனைகளும் படைத்தவர். ஆனால் ஆறு வயதில் அவர் முதல் பயணமாக அமெரிக்கா வந்திறங்கியபோது, அவரது தந்தையின் கைகளில் 700 டாலர் மட்டுமே இருந்திருக்கிறது. அதை வைத்துக்கொண்டு தன்னை விளையாட்டில் வளர்த்தெடுக்க தந்தை எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை ‘அன்ஸ்டாபபிள்’ என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

“பெலாரசில் உள்ள கோமல் என்பது எங்கள் சொந்த ஊர். ரஷியாவின் எல்லையில் அது அமைந்திருக்கிறது. அணுஉலை விபத்தால் ஆபத்து நிறைந்த பகுதியாக மாறிய ெசர்னோபில் எங்கள் பகுதிக்கு அருகில்தான் இருக்கிறது. அந்த அணு உலை வெடித்ததும் எல்லோரும் பாதுகாப்புத்தேடி இடம்பெயர்ந்தார்கள். அப்போது எனது பெற்றோர், எங்கள் தாத்தா வசித்த நெக்கானிலே என்ற இடத்துக்கு சென்றிருக்கிறார்கள். அது சைபீரிய பகுதியில் உள்ளது. அங்குதான் நான் பிறந்தேன்” என்று தான் பிறப்பை விளக்கியுள்ளார்.

மரிய ஷரபோவாவின் சிறுவயது பருவத்தில் ரஷியாவில் டென்னிஸ் வசதிபடைத்தவர்களுக்கான விளையாட்டாக இருந்திருக்கிறது. அங்கு சோச்சி என்ற கடற்கரை உல்லாச நகரத்தில், யுட்கின் என்ற பயிற்சியாளரிடம் கொண்டுபோய் முதலில் மரிய ஷரபோவாவை சேர்த்திருக்கிறார்கள். நான்கு வயதில் இருந்து பயிற்சி தொடர்ந்திருக்கிறது.

“எனது பயிற்சியாளர் யுட்கின் நான் சிறப்பாக விளையாடுவதாக எல்லோரிடமும் கூறினார். அந்த காலகட்டத்தில் யெவ்ஜினி கபல்நிக்கோ ரஷியாவின் டென்னிஸ் ஹீரோவாக திகழ்ந்துகொண்டிருந்தார். அவரது தந்தை எனது விளையாட்டை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பந்தை பரிசாக தந்தார். அதையும் எடுத்துக்கொண்டு நான் மாஸ்கோ பயிற்சி முகாமுக்கு சென்றேன். அங்கு பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினோ நவரத்திலோவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது முன்னிலையில் நான் பத்து நிமிடங்கள் விளையாடினேன். அதை பார்த்த நவரத்திலோவா என் தந்தையை அழைத்து, ‘இவளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இவளை புளோரிடாவில் உள்ள பயிற்சி முகாமில் பங்குகொள்ளச்செய்யுங்கள்’ என்றார்.

அப்போது சோவியத் யூனியன் பல நாடு களாக சிதறிக்கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் அமெரிக்க செல்ல விசா பெறுவது என்பது செலவு மிகுந்த கடினமான கனவாக இருந்தது. ஆனாலும் என் தந்தை அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். கல்யாணத்திற்கு வாங்கியிருந்த பழைய கோட்டை அணிந்துகொண்டு அமெரிக்க தூதரகத்திற்கு விசாவுக்கு வந்தார். எப்படியோ மூன்றாண்டுக்கு விசா கிடைத்தது.

அந்த விசாவில் நான் அமெரிக்கா சென்றபோதுதான், விமான நிலையத்தில் எங்களை வரவேற்க வேண்டியவர் வராததால் தவித்தோம். எங்களுக்கு ரஷிய தம்பதிகள் இடமளித்ததால், அவர்களுடன் ஓட்டல் அறையில் தரையில் படுத்து தூங்கிவிட்டு, காலையில் விழித்து புளோரிடா சென்றோம். அங்குள்ள மையம் ஒன்றிற்கு சென்றபோது பயிற்சி கட்டணமாக ஆயிரம் டாலர் கேட்டார்கள். தந்தை 700 டாலரே வைத்திருந்தார். அந்த கட்டணத்திற்குள் பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக நிக்போலாத்தரி பயிற்சி அகாடமிக்கு பயணப்பட்டோம். ஆந்த்ரே அகாசி, மோனிகா செலஸ், ஜிம்கூரியர் போன்ற டென்னிஸ் ஜாம்பவான்களை உருவாக்கியவர், நிக்போலாத்தரி.

அவரது அகாடமியின் முன்பு போய் அகதி போல் நாங்கள் நின்றோம். முதல் நாள் எங்களை உள்ளேவிடவில்லை. மறுநாள் என் விளையாட்டை அவர் சிறிது நேரம் பார்க்க விரும்பினார். விளையாட்டை பார்த்துவிட்டு என்னை சேர்த்துக்கொள்ள சம்மதித்தார். ஆனால் பத்து வயதுக்கு கீழ் உள்ளவர் களுக்கு அங்கு தங்குமிடம் இல்லை என்று கூறிவிட்டார். அதனால் இன்னொரு ரஷிய பெண்ணின் வீட்டில் ஒரு அறையில் நானும், என் தந்தையும் தங்கினோம். மாதம் 250 டாலர் வாடகை. அங்கிருந்து தினமும் பொழுது புலரும் முன்பே நடந்து பயிற்சி மையத்திற்கு செல்வோம். என்னை அங்கே விட்டுவிட்டு என் தந்தை பெரிய பங்களா வீடுகளுக்கு புல்வெட்டவும், கட்டிட வேலை செய்யவும் செல்வார். நான் பழைய துணியுடன் விளையாட தயாராவேன். அங்கு பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் அமெரிக்க கோடீஸ்வரர்களின் பிள்ளைகள். அவர்கள் என் உடையையும், என்னையும் பார்த்து கிண்டல் செய்வார்கள்” என்கிறார்.

அந்த மையத்தில் அதிக காலம் மரியாவால் பயிற்சி பெறமுடியவில்லை. ஏன்என்றால் அங்கு பணத்தை அள்ளிக்கொடுத்த வசதிபடைத்த குடும்பத்து சிறுமிகள், மரியாவுடன் போட்டியில் பங்குபெற்றிருக்கிறார்கள். அவர்களை மரியா தொடர்ச்சியாக தோற்கடித் திருக்கிறார். அதனால் அந்த சிறுமிகள் மனதொடிந்து போனார்கள். மரியாவை நீக்கினால்தான் தாங்கள் அங்கு தொடர்ந்து பயிற்சி பெறுவோம் என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் மூலம் கிடைக்கும் பணத்தை இழக்க விரும்பாத நிக், மரியாவை காரணம் சொல்லாமல் வெளியேற்றிவிட்டார்.

அதன் பின்பு இன்னொரு பயிற்சி மையத்திற்கு மரியா சென்றுள்ளார். அங்கு இவரிடம் அதிக பணம் கேட்டிருக்கிறார்கள். அதற்காக அங்குள்ள கோல்ப் மைதானத்தில் புல் வெட்டும் பணிக்கு தந்தை சென்றிருக்கிறார். வேலை செய்துகொண்டிருக்கும்போது முதுகு எலும்பு பாதிக்கப்பட்டு கடும் வலியில் அவதிப்பட்டுள்ளார். அதனால் இரண்டு வாரம் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அப்போது பயிற்சிக்கும் பணம் வழங்க முடியாமல், வீட்டு வாடகைக்கும் பணம் வழங்க முடியாமல் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்திருக்கிறார்கள். இவர்களது கஷ்டத்தை கேள்விப்பட்டு பயிற்சியாளர்களில் ஒருவர், ஒரு வருடம் தன் வீட்டிலே தங்கியிருந்து பயிற்சிக்கு செல்லும்படி கூறியிருக்கிறார். அதற்குள் மரியாவின் விளையாட்டுத் திறன் அதிகரித்துவிட நிக் மறுபடியும் அழைத்து இலவசமாகவே பயிற்சி தருவதாக கூறியிருக்கிறார். உணவும், தங்கும் இடமும் இலவசமாக வழங்கியுள்ளார். ஆனால் தந்தையை உள்ளே தங்க அவர் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் தந்தையும் ஆங்கிலம் படித்து வெளியே வேலைகளுக்கு சென்று சம்பாதிக்கத் தொடங்கியிருக்கிறார்.

அந்த காலகட்டத்தில்தான் உலகப்புகழ் பெற்ற விளையாட்டு ஏஜென்சியின் தொடர்பு கிடைத்திருக் கிறது. திறமையான விளையாட்டு வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களை பெருந்தொகைக்கு ஒப்பந்தம் செய்து விளையாடவைக்கும் நிறுவனம் அது. அவர் களிடம் மரியாவின் தந்தை யூரி வருடத்திற்கு ஒப்பந்த தொகையாக 50 ஆயிரம் டாலர் கேட்டிருக்கிறார். அவர்களோ வருடத்திற்கு ஒரு லட்சம் டாலர் தருவதாக கூறியிருக்கிறார்கள். அப்போது மரியாவுக்கு 11 வயதுதான். மகளுக்கு இவ்வளவு பணம் கிடைப்பது தெரிந்ததும் தாயும் வந்து சேர்ந்துகொண்டார். 2001-ம் ஆண்டு தனது 14-ம் வயதில் தொழில்ரீதியாக வேர்ல்ட் டென்னிஸ் அசோசியேஷன் போட்டித் தொடர்களில் பங்கேற்க ஆரம்பித்தார். 2004-ல் விம்பிள்டன் பெண்கள் இறுதிப்போட்டியில் பங்கேற்றார்.

“நான் செரினா வில்லியம்சை எதிர்த்து விளையாடவேண்டும். முதல் நாள் இரவில் தூங்கி க்கொண்டிருந்த எனக்கு திடீரென்று காய்ச்சல் வந்ததுபோல் இருந்தது. டீயில் தேன் கலந்து பருகிவிட்டு படுத்தேன். மறுநாள் போட்டி மைதானத்திற்கு சென்றேன். அங்கு சென்றதும் எனக்கு சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அம்பயரிடம் கூறிவிட்டு பாத்ரூம் சென்று கதவை அடைத்தேன். வெளியே மைதானத்தில் உற்சாகமான கரகோஷம். எட்டிப்பார்த்தேன். தோள்களை உயர்த்திக்கொண்டு கம்பீரமாக செரினா நடந்து வந்தார். அவரை வரவேற்கும் விதமாகத்தான் ரசிகர்கள் அவ்வளவு கரகோஷம் எழுப்பியிருக்கிறார்கள். களத்தில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். கடுமையாக போராடி அவரை வீழ்த்தினேன். தோற்றதும் செரினா கைகொடுத்து பாராட்டுவார் என்று நினைத்தேன். அவரோ கட்டிப்பிடித்து வாழ்த்தினார். பொதுவாக ரஷியர்கள் வெற்றியை கொண்டாட மது பாட்டிலோடுதான் வருவார்கள். என் தந்தையோ கைநிறைய என்னை பற்றி வெளிவந்த பத்திரிகைகளோடு புன்னகைத்தபடி வந்தார்..” என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார், டென்னிஸ் ராணி மரிய ஷரபோவா!

தொடர்ந்து டென்னிஸ் களத்தில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்த இவர், ஏழ்மையுடன் போராடி வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு!