மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார் அபார வெற்றி


மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார் அபார வெற்றி
x
தினத்தந்தி 1 Jan 2018 10:00 PM GMT (Updated: 1 Jan 2018 8:52 PM GMT)

சென்னையில் இருந்து புனேக்கு மாற்றப்பட்ட ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி மராட்டிய ஓபன் என்ற பெயருடன் நேற்று தொடங்கியது.

புனே,

சென்னையில் இருந்து புனேக்கு மாற்றப்பட்ட ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி மராட்டிய ஓபன் என்ற பெயருடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி நடந்த தொடக்க விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

மொத்தம் ரூ.3½ கோடி பரிசுத்தொகைக்கான இந்த டென்னிஸ் திருவிழாவில், ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ராம்குமார், ஸ்பெயினின் ராபர்டடோ கார்பல்லேசுடன் மோதினார். முதல் செட்டில் கடும் சவாலை சந்தித்த ராம்குமார், 2-வது செட்டில் தனது அதிரடியான சர்வீஸ்கள் மூலம் கார்பல்லேசை திணறடித்தார். 1 மணி 35 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் ராம்குமார் 7-6(4) 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

உலக தரவரிசையில் 148-வது இடம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் அடுத்து முன்னாள் சாம்பியனும், 6-ம் நிலை வீரருமான குரோஷியாவின் மரின் சிலிச்சுடன் மோத உள்ளார். ரிக்கார்டோ ஒஜிடா லாரா (ஸ்பெயின்), நிகோலஸ் ஜாரி (சிலி), ஜிலெஸ் சிமோன் (பிரான்ஸ்), பியாரே ஹக்ஸ் ஹெர்பர்ட் (பிரான்ஸ்), மிகைல் குகுஷ்கின் (கஜகஸ்தான்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் விஷ்ணு வர்தன்- ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 6-3, 6-7(8), 6-10 என்ற செட் கணக்கில் அடில் ஷம்ஸ்தின் (கனடா) நியல் ஸ்கப்ஸ்கி (அமெரிக்கா) இணையிடம் தோல்வியை தழுவியது. முதல் நாளில் ரசிகர்கள் கூட்டம் இன்றி ஸ்டேடியம் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story