ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெடரர், ஜோகோவிச் வெற்றி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெடரர், ஜோகோவிச் வெற்றி
x
தினத்தந்தி 16 Jan 2018 9:30 PM GMT (Updated: 16 Jan 2018 8:39 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்


கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதன் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 51-ம் நிலை வீரர் அல்ஜாஸ் பெடெனேவை (சுலோவேனியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஜோகோவிச் வெற்றி


மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் டொனால்டு யங்கை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். கனடா வீரர் மிலோச் ரானிச் 7-6 (7-5), 5-7, 4-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் லுகாஸ் லாகோவிடம் (சுலோவக்கியா) தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.

மற்ற ஆட்டங்களில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரே (ஜெர்மனி), ஜூயன் மார்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), டோமினிச் திம் (ஆஸ்திரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), பெர்னாண்டோ வெர்டாஸ்கோ (ஸ்பெயின்), பாபி போக்னினி (இத்தாலி), மான்பில்ஸ் (பிரான்ஸ்), குல்லெர்மோ கார்சியா லோபெஸ் (ஸ்பெயின்), ரிச்சர்ட் காஸ்குயட் (பிரான்ஸ்), சாம் குயரி (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

சிமோனா ஹாலெப் வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 7-6 (7-5), 6-1 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் டெஸ்டானா அய்வாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா 6-1, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

ஹீதர் வாட்சன் தோல்வி


இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீராங்கனை ஜெசிகா பொன்செட்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இங்கிலாந்து வீராங்கனை ஹீதர் வாட்சன் 5-7, 6-7 (6-8) என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீராங்கனை யுலியா புதின்ட்சேவாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), பவுச்சர்ட் (கனடா), லூசி சபரோவா (செக்குடியரசு), எலினா வெஸ்னினா (ரஷியா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), மிர்ஜனா லூசிச் பரோனி (குரோஷியா), நாமி ஒசகா (ஜப்பான்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Next Story