டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஹாலெப் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் வாவ்ரிங்கா, முகுருஜா அதிர்ச்சி தோல்வி + "||" + Australian Open Tennis: Federer, Halleb advanced for the 3rd round

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஹாலெப் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் வாவ்ரிங்கா, முகுருஜா அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:
பெடரர், ஹாலெப் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
வாவ்ரிங்கா, முகுருஜா அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர், ஹாலெப், ஜோகோவிச் உள்ளிட்டோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர், ஹாலெப், ஜோகோவிச் உள்ளிட்டோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

பெடரர், ஜோகோவிச் வெற்றி


‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.


4-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தன்னை எதிர்த்த ஜெர்மனியின் லெனார்ட் ஸ்டிரப்பை 6-4, 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 36 வயதான பெடரர் 17 ஏஸ் சர்வீஸ்களை வீசியது வெற்றியை சுலபமாக்கியது. பெடரர் அடுத்து பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை எதிர்கொள்கிறார்.

சுட்டெரிக்கும் வெயிலில் 2 மணி 45 நிமிடங்கள் மல்லுகட்டிய 6 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 4-6, 6-3, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் மான்பில்சை (பிரான்ஸ்) வெளியேற்றினார். கோவிகோவிச்சுக்கு எதிராக இதுவரை 15 முறை மோதியுள்ள மான்பில்ஸ் ஒரு ஆட்டத்தில் கூட வென்றதில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஜோகோவிச் 3-வது சுற்றில் அல்பெர்ட் ரமோஸ் வினோலஸ்சுடன் (ஸ்பெயின்) மோதுகிறார்.

வாவ்ரிங்கா தோல்வி

5-ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா), தகுதிநிலை வீரர் டெனிஸ் குட்லாவுக்கு (அமெரிக்கா) எதிரான ஆட்டத்தில் முதல் இரு செட்டை இழந்த போதிலும் மனம் தளராமல் போராடி சரிவில் இருந்து மீண்டார். 3 மணி 48 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் டொமினிக் திம் 6-7 (6-8), 3-6, 6-3, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

அதே சமயம் உலக தரவரிசையில் 9-வது இடம் வகிப்பவரும், 2014-ம் ஆண்டு சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை 97-ம் நிலை வீரர் டென்னிஸ் சான்ட்கிரின் (அமெரிக்கா) 6-2, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் பந்தாடினார். இதே போல் 7-ம் நிலை வீரர் டேவிட் கோபின் (பெல்ஜியம்) 6-1, 6-7 (5-7), 1-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் ஜூலியன் பென்னட்டுவிடம் (பிரான்ஸ்) வீழ்ந்தார்.

மற்றபடி அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) ஆகியோரும் வெற்றிகரமாக 2-வது தடையை கடந்தனர்.

முகுருஜா ‘அவுட்’

பெண்கள் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கார்பின் முருகுஜா (ஸ்பெயின்) 6-7 (7), 4-6 என்ற நேர் செட்டில் சு வெய் ஹிசையிடம் (சீனதைபே) மண்ணை கவ்வினார். தரவரிசையில் 82-வது இடத்தில் உள்ள 32 வயதான வெய் ஹிசை, ‘நான் வீழ்த்திய மிகப்பெரிய வீராங்கனைகளில் முகுருஜாவும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. இந்த வெற்றி எப்போதும் எனது மனதில் நிலைத்து நிற்கும்’ என்றார்.

இதே போல் இங்கிலாந்தின் முன்னணி வீராங்கனை ஜோஹன்னா கோன்டாவின் பயணத்துக்கும் முட்டுக்கட்டை விழுந்தது. அவரை 6-4, 7-5 என்ற நேர் செட்டில் பெர்னர்டா பெரா (அமெரிக்கா) சாய்த்தார்.

கெர்பருக்கு பிறந்த நாள் பரிசு

2016-ம் ஆண்டின் சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டோனா வெகிச்சையும் (குரோஷியா), ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் பவுச்சார்டையும் (கனடா) துவம்சம் செய்தனர்.

வெற்றிப்பரிசுடன் நேற்று தனது 30-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய கெர்பர், 3-வது சுற்றில் எதிர்பார்த்தபடியே முன்னாள் சாம்பியன் ரஷியாவின் மரிய ஷரபோவாவுடன் நாளை மோத இருக்கிறார். முன்னதாக ஷரபோவா 2-வது சுற்றில் 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் செவஸ்தோவாவை (லாத்வியா) விரட்டினார்.

ஷரபோவாவும், கெர்பரும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் ஷரபோவா 4 ஆட்டத்திலும், கெர்பர் 3 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளனர்.

கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) ஆகிய வீராங்கனைகளும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

இரட்டையரில் இந்தியர்கள் அபாரம்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியர்களுக்கு தித்திப்பான முடிவுகள் கிட்டின. இதன் முதலாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-புராவ் ராஜா ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்டில் நிகோலோஸ் பாசிலாஷ்விலி (ஜார்ஜியா)- ஆன்ட்ரியாஸ் ஹைதர் (ஆஸ்திரியா) இை-ணையை வென்றது.

மற்ற ஆட்டங்களில் ரோகன் போபண்ணா (இந்தியா)- ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) கூட்டணி 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ரையான் ஹாரிசன் (அமெரிக்கா)- போஸ்பிசில் (கனடா) இணையையும், திவிஜ் சரண் (இந்தியா)- ராஜீவ் ராம் (அமெரிக்கா) ஜோடி 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் மரிஸ் கோபின் (ருமேனியா)- விக்டர் டிரோக்கி (செர்பியா) இணையையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.