டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் நடால், டிமிட்ரோவ் ஆஸ்டாபென்கோ வெளியேற்றம் + "||" + Australian Open Tennis: In the 4th round Natal, Dimitrov Ostabenko evacuation

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் நடால், டிமிட்ரோவ் ஆஸ்டாபென்கோ வெளியேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:
4-வது சுற்றில் நடால், டிமிட்ரோவ்
ஆஸ்டாபென்கோ வெளியேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் நடால், டிமிட்ரோவ், வோஸ்னியாக்கி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் நடால், டிமிட்ரோவ், வோஸ்னியாக்கி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நடால் அபாரம்


ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.


5-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) தன்னை எதிர்த்த டாமிர் ஜூம்ஹரை (போஸ்னியா) 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட்டில் புரட்டியெடுத்தார். ஆஸ்திரேலிய ஓபனில் 11-வது முறையாக 4-வது சுற்றை எட்டியிருக்கும் நடால் அடுத்து டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) எதிர்கொள்கிறார்.

உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஆந்த்ரே ரப்லெவை தோற்கடித்தார். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் அவரிடம் அடைந்த தோல்விக்கு டிமிட்ரோவ் பழிதீர்த்துக் கொண்டார்.

மற்றொரு ஆட்டத்தில் குரோஷியாவின் மரின் சிலிச் 7-6 (7-4), 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் ரையான் ஹாரிசை விரட்டினார். நிக் கிர்ஜியாஸ் (ஆஸ்திரேலியா), பாப்லோ காரெனோ பஸ்தா (ஸ்பெயின்), கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) ஆகியோரும் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

ஆஸ்டாபென்கோ தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், 7-ம் நிலை வீராங்கனையுமான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) பதம் பார்த்தார். 33-ம் நிலை வீராங்கனையான கோன்டாவெய்ட் இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக 4-வது சுற்றுக்கு வந்திருக்கிறார்.

போட்டித் தரநிலையில் 2-வது இடம் வகிக்கும் கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார். ஸ்விடோலினா (உக்ரைன்), பெட்ரா மார்டிச் (குரோஷியா), ரைபரிகோவா (சுலோவக்கியா), சுவாரஸ் நவரோ (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

இந்திய ஜோடிகள் வெற்றி

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திவிஜ் சரண்- அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி 4-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் பாபியோ போக்னினி (இத்தாலி)- கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) இணையை சாய்த்தது. இதே போல் ரோகன் போபண்ணா (இந்தியா), ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) கூட்டணி 6-2, 7-6 (7-3) என்ற நேர் செட்டில் லியானர்டோ மேயர் (அர்ஜென்டினா)- ஜோவ் சோசா (போர்ச்சுகல்) ஜோடியை வெளியேற்றி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.