டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பரிடம் வீழ்ந்தார் ஷரபோவா பெடரர், ஜோகோவிச் முன்னேற்றம் + "||" + Australian Open Tennis: Sharapova fell to Kerber

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பரிடம் வீழ்ந்தார் ஷரபோவா பெடரர், ஜோகோவிச் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:
கெர்பரிடம் வீழ்ந்தார் ஷரபோவா
பெடரர், ஜோகோவிச் முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் முன்னாள் சாம்பியன் ஷரபோவா நேர் செட்டில் கெர்பரிடம் வீழ்ந்தார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் முன்னாள் சாம்பியன் ஷரபோவா நேர் செட்டில் கெர்பரிடம் வீழ்ந்தார். ஆண்கள் பிரிவில் பெடரர், ஜோகோவிச்சின் ‘வீறுநடை’ தொடருகிறது.

பெடரர், ஜோகோவிச் அபாரம்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-2, 7-5, 6-4 என்ற நேர் செட்டில் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை (பிரான்ஸ்) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். நடப்பு சாம்பியனான பெடரர் அடுத்து மார்டான் புசோவிக்சை (ஹங்கேரி) சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் அல்பெர்ட் ரமோஸ் வினோலசை பந்தாடினார். ஆட்டத்திற்கு இடையே முதுகு மற்றும் கால்வலியால் அவதிப்பட்ட ஜோகோவிச் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆடியது குறிப்பிடத்தக்கது.

ஸ்வெரேவ் தோல்வி

பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ள வீரர்களில் ஒருவராக கருதப்பட்ட தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவர் 7-5, 6-7 (3-7), 6-2, 3-6, 0-6 என்ற செட் கணக்கில் 58-ம் நிலை வீரர் ஹியோன் சங்கிடம் (தென்கொரியா) வீழ்ந்தார். இதன் மூலம் ஹியோன் சங், கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல்முறையாக 4-வது சுற்றில் அடியெடுத்து வைத்தார்.

இதே போல் அபாயகரமான வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 3-6, 3-6, 2-6 என்ற நேர் செட்டில் தாமஸ் பெர்டிச்சிடம் (செக்குடியரசு) ‘சரண்’ அடைந்தார். டொமினிக் திம் (ஆஸ்திரியா), பாபியோ போக்னினி (இத்தாலி), சான்ட்கிரின் (அமெரிக்கா) ஆகியோரும் 4-வது சுற்றை எட்டினர்.

ஷரபோவா வெளியேற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த முன்னாள் நம்பர் ஒன் மங்கைகள் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி)- மரிய ஷரபோவா (ரஷியா) இடையிலான ஆட்டம் உப்புசப்பின்றி ஒரு தரப்பாக அமைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய 2016-ம் ஆண்டு சாம்பியனான கெர்பர் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் ஷரபோவாவை 64 நிமிடங்களில் அடக்கினார்.

பந்தை வலுவாக வெளியே அடித்து விடும் தானாக செய்யக்கூடிய தவறுகளை ஷரபோவா அதிகமாக (26 முறை) செய்ததால் தாக்குப்பிடிக்க முடியாமல் போய் விட்டது. இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காத கெர்பர் தொடர்ச்சியாக பெற்ற 12-வது வெற்றி இதுவாகும். கெர்பர் 4-வது சுற்றில் சு வெய் ஹிசையை (சீனதைபே) சந்திக்கிறார். முன்னதாக ஹிசை 6-2, 7-5 என்ற நேர் செட்டில் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவை (போலந்து) விரட்டினார்.

தப்பினார், ஹாலெப்


‘நம்பர் ஒன்’ நட்சத்திரமான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 3-வது தடையை கடக்க ஒரு யுத்தமே நடத்த வேண்டியதாகி விட்டது. அவர் 76-ம் நிலை வீராங்கனை லாரென் டேவிசுடன்(அமெரிக்கா) மோதினார். எதிராளி கொடுத்த கடுமையான நெருக்கடியால் தடுமாறிய ஹாலெப் மூன்று முறை ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டார். கடைசி செட்டை வசப்படுத்த மட்டும் 2 மணி 22 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.

3 மணி 45 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் ஹாலெப் 4-6, 6-4, 15-13 என்ற செட் கணக்கில் டேவிசை சாய்த்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பின்னர் ஹாலெப் கூறுகையில், ‘எனது வாழ்க்கையில் இவ்வளவு நீண்ட 3-வது செட்டை நான் விளையாடியதில்லை. ஒரு வழியாக வெற்றி பெற்று தொடரில் நீடிப்பது உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. ஏறக்குறைய எனது சக்தி முழுவதையும் இழந்து விட்டேன்’ என்றார்.

மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா, ஸ்டிரிகோவா (இருவரும் செக் குடியரசு), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ஒசாகா (ஜப்பான்) ஆகியோரும் தங்களது 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

பெயஸ் ஜோடி வெற்றி


ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், புராவ் ராஜா ஜோடி 7-6 (7-3), 5-7, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் ஜாமி முர்ரே (இங்கிலாந்து)- புருனோ சோரஸ் (பிரேசில்) இணையை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.