ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெடரர், சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெடரர், சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேற்றம் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 22 Jan 2018 10:45 PM GMT (Updated: 22 Jan 2018 7:40 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், சிமோனா ஹாலெப் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். #Tennis #Australian

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், சிமோனா ஹாலெப் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 4-வது சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

இதன் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 80-ம் நிலை வீரர் மார்டான் புசோவிக்சை (ஹங்கேரி) சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 36 வயதான பெடரர் 6-4, 7-6 (7-3), 6-2 என்ற நேர்செட்டில் மார்டானை வீழ்த்தி கால்இறுதிக்கு 14-வது முறையாக முன்னேறினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கென் ரோஸ்வாலுக்கு (1977-ம் ஆண்டு) பிறகு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கால்இறுதிக்குள் நுழைந்த அதிக வயதுடைய வீரர் என்ற சிறப்பை பெடரர் பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் இத்தாலியின் பாபியோ போக்னினியை தோற்கடித்து 7-வது முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கால்இறுதியில் தாமஸ் பெர்டிச், பெடரரை எதிர்கொள்கிறார்.

இன்னொரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-7 (4-7), 5-7, 6-7 (3-7) என்ற நேர்செட்டில் 58-ம் நிலை வீரர் ஹியோன் சங்கிடம் (தென்கொரியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 3 மணி 21 நிமிடம் நடைபெற்றது. முழங்கை காயத்துக்கு சிகிச்சை பெற்று ஆடிய ஜோகோவிச் தன்னை வீழ்த்திய ஹியோன் சங்கின் ஆட்டம் சிறப்பாக இருந்தது என்று பாராட்டினார். வெற்றி பெற்ற ஹியோன் சங் கருத்து தெரிவிக்கையில், ‘ஜோகோவிச் எனக்கு முன்மாதிரி வீரர். அவரது ஆட்டத்தை காப்பி அடிக்க முயற்சித்தேன்’ என்றார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 2-6, 6-4, 6-7 (4-7), 7-6 (9-7), 3-6 என்ற செட் கணக்கில் 97-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டென்னிஸ் சான்ட்கிரினிடம் வீழ்ந்து நடையை கட்டினார். இந்த ஆட்டம் 3 மணி 54 நிமிடம் நீடித்தது. அறிமுக வீரராக களம் கண்ட டென்னிஸ் சான்ட்கிரின் கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதிக்கு முன்னேறிய 2-வது அறிமுக வீரர் என்ற சிறப்பை தனதாக்கினார். கால்இறுதியில் டென்னிஸ் சான்ட்கிரின், ஹியோன் சங்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), 72-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோகி ஒசாகாவுடன் மோதினார். இதில் சிமோனா ஹாலெப் 6-3, 6-2 என்ற நேர்செட்டில் 20 வயதான நோகி ஒசாகாவை வீழ்த்தி 3-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

வெற்றிக்கு பிறகு சிமோனா ஹாலெப் அளித்த பேட்டியில், ‘மீண்டும் கால்இறுதிக்குள் நுழைந்து இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. காயத்துடன் இந்த போட்டியை தொடங்கிய நான் கால்இறுதிக்கு முன்னேறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. மிகவும் கவனமுடன் ஆடி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றேன். இந்த போட்டி எனக்கு மராத்தான் போல் இருந்தது. காயத்துடன் தான் ஆடி வருகிறேன். இந்த போட்டி முடிந்ததும் சில நாட்கள் ஓய்வு எடுப்பேன்’ என்று தெரிவித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் 88-ம் நிலை வீராங்கனையான ஹி சு வெய்யை (சீனதைபே) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். ஏஞ்சலிக் கெர்பர் கால்இறுதியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ்சை சந்திக்கிறார். 3-வது சுற்று ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 6-3, 6-2 என்ற நேர்செட்டில் கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். மேடிசன் கீஸ் இந்த போட்டி தொடரில் இதுவரை ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-7 (5-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 24-ம் நிலை வீராங்கனையான பார்பரோ ஸ்டிரிகோவாவை (செக்குடியரசு) சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் பிளிஸ்கோவா, சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் திவிஜ் சரண் (இந்தியா)-ராஜீவ் ராம் (அமெரிக்கா) ஜோடி 6-3, 6-7 (4-7), 4-6 என்ற செட் கணக்கில் லுகாஸ் குபோட் (போலந்து)-மார்செலோ மெலோ இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

மற்றொரு ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) இணை 4-6, 7-6 (7-5), 3-6 என்ற செட் கணக்கில் ஆலிவர் மாராச் (ஆஸ்திரியா)-மாட் பாவிச் (குரோஷியா) ஜோடியிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.

Next Story