ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீரர் நடால் வெளியேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீரர் நடால் வெளியேற்றம்
x
தினத்தந்தி 23 Jan 2018 10:15 PM GMT (Updated: 23 Jan 2018 8:05 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மரின் சிலிச், நம்பர் ஒன் வீரர் நடாலை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முக்கியமான கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், முன்னாள் சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்), 6-ம் நிலை வீரர் மரின் சிலிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார். இருவரும் நீயா-நானா என்று கடுமையாக மல்லுகட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை நடால் வசப்படுத்த, அடுத்த செட்டில் சிலிச் பதிலடி கொடுத்தார். 3-வது செட்டை ‘டைபிரேக்கர்’ வரை போராடி நடால் தனதாக்கினார். 4-வது செட்டில் எழுச்சி பெற்ற சிலிச், சாதுர்யமான ஷாட்டுகள் மூலம் நடாலை திணறடித்ததுடன் இந்த செட்டை எளிதில் கைப்பற்றினார்.

இதையடுத்து கடைசி செட் மீது எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் கடைசி செட்டின் 2-வது கேமில் நடாலின் சர்வீசை தகர்த்து சிலிச் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது, வலது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக நடால் அறிவித்தார். இதையடுத்து மரின் சிலிச் 3-6, 6-3, 6-7 (5-7), 6-2, 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். மணிக்கு அதிகபட்சமாக 215 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ்போட்டு மிரட்டிய சிலிச், 20 ஏஸ் சர்வீஸ்களை வீசியது வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. இந்த ஆட்டம் 3 மணி 47 நிமிடங்கள் நடந்தது.

முன்னதாக நடந்த மற்றொரு கால்இறுதியில் 49-ம் நிலை வீரர் இங்கிலாந்தின் கைல் எட்மன்ட் 6-4, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கிரிகோர் டிமிட்ரோவுக்கு (பல்கோரியா) ‘செக்’ வைத்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இதற்கு முன்பு 4-வது சுற்றை கூட தாண்டாத எட்மன்ட், தற்போது அரைஇறுதியை எட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

23 வயதான எட்மன்ட் அடுத்து மரின் சிலிச்சை எதிர்கொள்கிறார்.

பெண்கள் பிரிவில் நடந்த ஒரு கால்இறுதியில் 2-ம் நிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் கார்லா சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) சாய்த்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டம் நள்ளிரவு 1.35 மணியளவில் முடிவடைந்தது.

இன்னாரு ஆட்டத்தில் தரவரிசையில் 37-வது இடம் வகிக்கும் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் 4-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவுக்கு (உக்ரைன்) 6-4, 6-0 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். தனது அதிரடியான ஷாட்டுகளின் மூலம் எதிராளியின் 5 சர்வீஸ்களை முறியடித்து, 73 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த மெர்டென்ஸ், டாப்-5 இடத்திற்குள் உள்ள ஒரு வீராங்கனையை தோற்கடிப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

22 வயதான மெர்டென்ஸ், கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைப்பதும் இதுவே முதல் முறையாகும்.

கலப்பு இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஹங்கேரியின் டைமியா பபோஸ் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வானியா கிங் (அமெரிக்கா)- பிராங்கோ ஸ்சுகோர் (குரோஷியா) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. 

Next Story