டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பரை வீழ்த்தினார், ஹாலெப் + "||" + Australian Open Tennis kerber defeated, halep

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பரை வீழ்த்தினார், ஹாலெப்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பரை வீழ்த்தினார், ஹாலெப்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ருமேனியா வீராங்கனை ஹாலெப், கெர்பரை போராடி வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் 2-ம் நிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் மெர்டென்சை (பெல்ஜியம்) தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் 27 வயதான வோஸ்னியாக்கி இறுதிச்சுற்றுக்கு வருவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே அமெரிக்க ஓபனில் இரண்டு முறை இறுதி ஆட்டம் வரை முன்னேறி தோல்வியை தழுவினார்.

மற்றொரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், 2016-ம் ஆண்டு சாம்பியனுமான ஏஞ்சலிக் கெர்பரும் (ஜெர்மனி) பலப்பரீட்சையில் இறங்கினர். இரு முன்னணி மங்கைகள் மல்லுகட்டியதால் எதிர்பார்த்தது போலவே ஆட்டத்தில் அனல் பறந்தது. ஷாட்டுகளை வலுவாக திருப்புவதில் இருவரும் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். முதல் செட்டை ஹாலெப்பும், 2-வது செட்டை கெர்பரும் கைப்பற்ற, கடைசி செட்டில் விறுவிறுப்பு அதிகமானது. இறுதி செட்டில், தொடக்கத்தில் ஹாலெப் 5-3 என்று முன்னிலை வகித்தார். அதன் பிறகு வரிசையாக 3 கேம்களை வசப்படுத்திய கெர்பர் 6-5 என்று முன்னிலை கண்டதுடன் வெற்றியின் விளிம்பை எட்டினார். இரண்டு முறை ஆட்டத்தை வெல்லக்கூடிய வாய்ப்பு (மேட்ச் பாயிண்ட்) கெர்பருக்கு உருவான போது, அவற்றில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்ட ஹாலெப் அதன் பிறகு சுதாரித்து மீண்டார். கடைசியில் கெர்பரின் சர்வீசை முறியடித்து ஒரு வழியாக வெற்றிக்கனியை பறித்தார்.

2 மணி 20 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் ஹாலெப் 6-3, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் கெர்பரை வெளியேற்றி, ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 14 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த கெர்பரின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டியை எட்டிய முதல் ருமேனியா வீராங்கனை என்ற சாதனையை படைத்த ஹாலெப், மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் வோஸ்னியாக்கியுடன் நாளை மோதுகிறார்.

26 வயதான ஹாலெப் கூறுகையில், ‘கெர்பருக்கு எதிராக ஒவ்வொரு புள்ளிக்காகவும் கடைசி வரை போராட வேண்டும் என்று எனக்குள் கூறிக்கொண்டேன். அதன்படியே கடைசி வரை போராடி, தற்போது களத்தில் நீடிப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. கிராண்ட்ஸ்லாமில் நான் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது இது 3-வது (பிரெஞ்ச் ஓபனில் இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறார்) முறையாகும். இந்த தடவை அதிர்ஷ்டமும் இருக்கலாம். என்ன நடக்கும் என்பதை நாளை பார்ப்போம்’ என்றார்.

ஹாலெப், வோஸ்னியாக்கி இருவரும் தங்களது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு குறி வைத்திருக்கிறார்கள். வோஸ்னியாக்கி வாகை சூடினால் ‘நம்பர் ஒன்’ இடமும் அவரது வசம் ஆகி விடும். ஆஸ்திரேலிய ஓபனில், தங்களது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்காக இருவர் மோதுவது 1980-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

ஆண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதியில் 6-ம் நிலை வீரர் மரின் சிலிச் (குரோஷியா) 6-2, 7-6 (7-4), 6-2 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் கைல் எட்மன்ட்டை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச்சுற்றை அடைந்த முதல் குரோஷிய நாட்டவர் என்ற சிறப்பை பெற்ற மரின் சிலிச், இந்த வெற்றியின் மூலம் 29-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் 3-வது இடத்தை பிடிக்கிறார்.

இன்று நடக்கும் 2-வது அரைஇறுதியில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)- ஹியோன் சங் (தென்கொரியா) மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவரை சிலிச் இறுதி ஆட்டத்தில் சந்திப்பார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி - ஷரபோவாவும் வெளியேற்றம்
ஆஸ்திரேலியஓபன் டென்னிஸ் போட்டியில், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜாம்பவானான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இளம் வீரர் சிட்சிபாசிடம் வீழ்ந்தார்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நிஷிகோரி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், வோஸ்னியாக்கி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், வோஸ்னியாக்கி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.