அடுத்த ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடுவேன் பெடரர் நம்பிக்கை


அடுத்த ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடுவேன் பெடரர் நம்பிக்கை
x
தினத்தந்தி 29 Jan 2018 11:00 PM GMT (Updated: 29 Jan 2018 8:20 PM GMT)

‘அடுத்த ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவேன்’ என்று ஒற்றையர் பட்டத்தை தக்க வைத்த சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் நம்பிக்கை தெரிவித்தார்.

மெல்போர்ன்,

மெல்போர்னில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 6-2, 6-7 (5-7), 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் மரின் சிலிச்சை (குரோஷியா) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார்.

36 வயதான ரோஜர் பெடரர் 6-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தனதாக்கினார். அத்துடன் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இந்த நிலையில் ரோஜர் பெடரர் மெல்போர்னில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் மீண்டும் இங்கு வந்து விளையாட விரும்புகிறேன். போட்டி முடிந்ததும் அடுத்து இங்கு வருவேனா? என்பது குறித்து சொல்ல மறந்தது எனக்கு தெரியும். ஆனால் அடுத்த ஆண்டும் இந்த போட்டிக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறேன். துபாயில் அடுத்த மாதம் இறுதியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். நாடு திரும்பி எனது குடும்பத்தினருடன் சில நாட்களை கழித்த பிறகு அடுத்த போட்டிகளில் ஆடுவது குறித்து முடிவு எடுப்பேன். களிமண் தரையில் நடைபெறும் ஆட்டங்களிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன்.

இந்த முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைப்பேன் என்று நான் உறுதியாக நம்பவில்லை. பட்டத்தை வென்றதை என்னால் நம்ப முடியவில்லை. இது எனது டென்னிஸ் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான தருணமாகும். இந்த வெற்றி எனது மனதில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும். இவ்வாறு பெடரர் கூறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டி முடிவில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,760 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (9,605 புள்ளிகள்) 2-வது இடத்தில் நீடிக்கிறார். இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட குரோஷியா வீரர் மரின் சிலிச் (4,960 புள்ளிகள்) 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் ஒரு இடம் பின்தங்கி 4-வது இடத்தையும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், ஆஸ்திரியா வீரர் டொமினிச் திம் ஒரு இடம் பின்தங்கி 6-வது இடத்தையும் பெற்றுள்ளனர். பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 7-வது இடத்தில் தொடருகிறார். அமெரிக்க வீரர் ஜாக் சோக் இரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், அர்ஜென்டினா வீரர் ஜூயர் மார்ட்டின் டெல்போர்டோ ஒரு இடம் ஏற்றம் பெற்று 9-வது இடத்தையும், ஸ்பெயின் வீரர் பாப்லோ கார்ரெனோ பஸ்டா ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தையும் தனதாக்கி இருக்கிறார்கள்.

Next Story