டென்னிஸ்

முதல் சுற்றில் சகெத் மைனெனி அதிர்ச்சி தோல்வி + "||" + In the first round Saheth Minnie The shock has failed

முதல் சுற்றில் சகெத் மைனெனி அதிர்ச்சி தோல்வி

முதல் சுற்றில் சகெத் மைனெனி அதிர்ச்சி தோல்வி
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சகெத் மைனெனி அதிர்ச்சி தோல்வி கண்டார்.
சென்னை,

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் சகெத் மைனெனி, தகுதி சுற்று மூலம் முன்னேறிய சக நாட்டு வீரர் அர்ஜூன் காதேவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த சகெத் மைனெனி 7-6 (7-5), 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அர்ஜூன் காதேவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் நீடித்தது.

மற்றொரு இந்திய வீரர் சுமித் நாகல் 3-6, 3-6 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஆன்டோய்ன் எஸ்கோபியரிடம் வீழ்ந்து நடையை கட்டினார். இன்னொரு ஆட்டத்தில் தென்கொரியாவின் டுக் ஹீ லீ 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வைல்டு கார்டு மூலம் பங்கேற்ற இந்திய வீரர் விஜய் சுந்தர் பிரசாந்தை தோற்கடித்தார்.

இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீராம் பாலாஜி 4-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரர் வைஸ்யாவிடம் தோல்வி அடைந்தார். மற்ற ஆட்டங்களில் எகிப்து வீரர் முகமது சாப்வாத் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் இத்தாலியின் அலெஸ்சான்ட்ரோ பெகாவையும், மங்கோலியா வீரர் லூகாஸ் காதரினா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் இந்தியாவின் நிதின்குமார் சின்ஹாவையும், ஸ்பெயின் வீரர் ஜெரார்ட் கிரனோனலர்ஸ் 6-3, 6-2 என்ற நேர்செட்டில் இந்தியாவின் சசிகுமார் முகுந்தையும், இந்திய வீரர் சித்தார்த் ராவத் 6-2, 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டை சேர்ந்த தக்‌ஷினேஸ்வர் சுரேஷ்சையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-விஷ்ணுவர்தன் ஜோடி 7-6 (10-8), 6-1 என்ற நேர்செட்டில் கஜகஸ்தானின் டிமித்ரி பொப்கோ-பிமாபே ஜபதா இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. மற்றொரு ஆட்டத்தில் சகெத் மைனெனி (இந்தியா)-லூசா மார்கரோலி இணை 6-4, 6-3 என்ற நேர்செட்டில் இந்தியாவின் அடில் கல்யான்புர்-சகெத் முகுந்த் ஜோடியை தோற்கடித்தது.