36–வது வயதில் முதலிடத்தை பிடித்து ரோஜர் பெடரர் உலக சாதனை


36–வது வயதில் முதலிடத்தை பிடித்து ரோஜர் பெடரர் உலக சாதனை
x
தினத்தந்தி 17 Feb 2018 9:00 PM GMT (Updated: 17 Feb 2018 8:33 PM GMT)

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

ரோட்டர்டாம்,

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2–ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4–6, 6–1, 6–1 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹாசை தோற்கடித்து அரைஇறுதியை எட்டினார். சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபனை வசப்படுத்தி அசத்திய பெடரர் தற்போதைய வெற்றியின் மூலம், உலக டென்னிஸ் தரவரிசையில் ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை தட்டிச்சென்றார். மேலும் அதிக வயதில் முதலிடத்தை பிடித்த வீரர் என்ற சிறப்பையும் 36 வயதான பெடரர் பெற்றார். இதற்கு முன்பு அமெரிக்காவின் ஆந்த்ரே அகாசி தனது 33–வது வயதில் முதலிடத்தை பெற்றதே சாதனையாக இருந்தது.

2004–ம் ஆண்டு முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்த பெடரர், கடைசியாக 2014–ம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது அரியணையில் ஏறியிருக்கிறார். இந்த வயதில் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறியதை நம்பவே முடியவில்லை என்று பெடரர் மகிழ்ச்சி ததும்ப கூறினார்.


Next Story