இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : 3-வது சுற்றில் செரீனா தோல்வி


இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : 3-வது சுற்றில் செரீனா தோல்வி
x
தினத்தந்தி 14 March 2018 12:00 AM GMT (Updated: 13 March 2018 9:16 PM GMT)

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இண்டியன்வெல்ஸ்,

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தனது தங்கையுமான செரீனா வில்லியம்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார். 1 மணி 26 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் செரீனாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 29-வது முறையாக செரீனாவை சந்தித்த வீனஸ் வில்லியம்ஸ் அதில் பெற்ற 12-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் அலியாக்சான்ட்ரா சாஸ்னோவிச்சை (பெலாரஸ்) சாய்த்தார். ரஷிய வீராங்கனை டாரியா கசட்கினா 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்க ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்சை (அமெரிக்கா) வெளியேற்றினார்.

பெடரர் வெற்றி

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் செர்பியா வீரர் பிலிப் கிராஜினோவிச்சை எளிதில் விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 58 நிமிடமே தேவைப்பட்டது. 36 வயதான பெடரர் 4-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் ஜெரேமி சார்டியை சந்திக்கிறார். இன்னொரு ஆட்டத்தில் தென்கொரியா வீரர் சூங் ஹயோன் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் தாமஸ் பெர்டிச்சுக்கு (செக்குடியரசு) அதிர்ச்சி அளித்தார்.

Next Story