டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி அர்ஜென்டினா வீரர் சாம்பியன் + "||" + Argentine tennis player defeats Roger Federer

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி அர்ஜென்டினா வீரர் சாம்பியன்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி அர்ஜென்டினா வீரர் சாம்பியன்
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் மார்ட்டின் டெல்போட்ரோ, பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா வீரர் ஜூயான் மார்ட்டின் டெல்போட்ரோ, நம்பர் ஒன் வீரர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 8-ம் நிலை வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார்.


விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் டெல்போட்ரோ 6-4, 6-7 (8-10), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 5 முறை சாம்பியனான பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் இந்த ஆண்டில் தொடர்ச்சியாக 17 ஆட்டங்களில் வெற்றி கண்ட பெடரரின் சாதனை பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அத்துடன் தொடர்ந்து 11 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்த டெல்போட்ரோ உலக தரவரிசையில் 6-வது இடத்துக்கு முன்னேறினார்.

வெற்றிக்கு பிறகு டெல்போட்ரோ அளித்த பேட்டியில், ‘இன்னும் எனக்கு பதற்றமாக தான் இருக்கிறது. எனது உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இந்த வெற்றியை என்னால் நம்பமுடியவில்லை. இது கனவு போல் இருக்கிறது. இந்த வெற்றிக்காக நான் கடுமையாக உழைத்தேன். இந்த வெற்றி அற்புதமானது’ என்று தெரிவித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோகி ஒசாகா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ரஷியாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 70 நிமிடமே தேவைப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் நோமி ஒசாகா உலக தரவரிசையில் 44-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு ஏற்றம் கண்டார். தோல்வி கண்ட டாரியா கசட்கினா 19-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு முன்னேறினார்.

அனா இவானோவிச்சுக்கு (செர்பியா) பிறகு இண்டியன்வெல்ஸ் பட்டத்தை வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையை நோமி ஒசாகா (20 வயது) பெற்றார். இந்த போட்டி தொடரில் நோகி ஒசாகா மரியா ஷரபோவா (ரஷியா), கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு), சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஆகிய முன்னணி வீராங்கனைகளை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.