மியாமி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுடன் பெடரர் வெளியேற்றம்


மியாமி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுடன் பெடரர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 25 March 2018 10:45 PM GMT (Updated: 25 March 2018 7:18 PM GMT)

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றுடன் பெடரர் வெளியேறியதுடன் நம்பர் ஒன் இடத்தையும் இழந்தார்.

மியாமி,

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவிய சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பறிகொடுத்துள்ளார்.

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான ரோஜர் பெடரர் (அமெரிக்கா), தகுதி நிலை வீரரான தனாசி கோக்கினாகிஸ்சை(ஆஸ்திரேலியா) எதிர்கொண்டார். முதல் செட்டை கைப்பற்றிய பெடரர் அடுத்த இரு செட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சிக்குள்ளானார். 2 மணி 21 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் உலக தரவரிசையில் 175-வது இடம் வகிக்கும் 21 வயதான கோக்கினாகிஸ் 3-6, 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் பெடரை வெளியேற்றினார்.

இந்த தோல்வியின் மூலம் பெடரர் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்துள்ளார். மியாமி டென்னிசில் பெடரர் குறைந்தது கால்இறுதிவரை முன்னேறினால் தான் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைக்க முடியும் என்ற நிலைமையில், அதற்கு முன்பாகவே வீழ்ந்து விட்டதால் இந்த தொடர் முடிந்ததும் வெளியிடப்படும் புதிய தரவரிசை பட்டியலில் ஸ்பெயினின் ரபெல் நடால் மீண்டும் நம்பர் ஒன் அரியணையில் ஏறுகிறார்.

20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான 36 வயதான பெடரர், அடுத்து களிமண்தரையில் நடக்க உள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதில் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபனும் அடங்கும். தொடர்ந்து 2-வது முறையாக அவர் ‘களிமண்’ சீசனை தவிர்க்கிறார். விம்பிள்டனை குறி வைத்து ஜூன் மாதம் மீண்டும் களம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ஜாக் சோக்கை சந்தித்தார். இதில் ஓரளவு சவால் அளித்த யுகி பாம்ப்ரி 3-6, 6-7 (3-7) என்ற நேர் செட்டில் ஜாக் சோக்கிடம் பணிந்தார்.

முதல்நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா) மண்ணை கவ்வி இருக்கிறார். பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் அவரை போலந்தின் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா 3-6 6-2, 6-3 என்ற செட் கணக்கில் விரட்டியடித்தார். விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) தன்னை எதிர்த்த அமெரிக்காவின் கிறிஸ்டினா மிகாலேவை 6-2, 6-1 என்ற நேர் செட்டில் பந்தாடியதுடன் 4-வது சுற்றையும் எட்டினார். இதே போல் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), பிளிஸ்கோவா (செக்குடியரசு), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), ஸ்லோனே ஸ்டீபன்ஸ்(அமெரிக்கா) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

Next Story