மான்ட்கார்லோ டென்னிஸ்: ரபெல் நடால் ‘சாம்பியன்’


மான்ட்கார்லோ டென்னிஸ்: ரபெல் நடால் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 22 April 2018 11:00 PM GMT (Updated: 22 April 2018 7:16 PM GMT)

மான்ட்கார்லோ டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.

மான்ட்கார்லோ,

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் நிஷிகோரியை (ஜப்பான்) எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். களிமண் தரை போட்டியான இங்கு நடால் பட்டத்தை வெல்வது இது 11-வது முறையாகும். வெற்றியின் மூலம் அவருக்கு ரூ.7½ கோடி பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. அத்துடன் அவர் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.

ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நடால் மகுடம் சூடுவது இது 31-வது முறையாகும். இதுவும் ஒரு சாதனை தான். இந்த வகையிலான மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக பட்டங்கள் வென்றவர்களின் பட்டியலில் நடாலுக்கு அடுத்த இடத்தில் ஜோகோவிச் (30 பட்டம்) இருக்கிறார்.

இதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க சகோதரர்கள் பாப் பிரையன்-மைக் பிரையன் ஜோடி 7-6 (5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆலிவர் மராச் (ஆஸ்திரியா)- மேட் பவிச் (குரோஷியா) இணையை வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்றது. முன்னதாக ஆலிவர் மராச்-பவின் ஜோடி தங்களது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடியை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

Next Story