மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; 34 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தார் நடால்


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; 34 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தார் நடால்
x
தினத்தந்தி 12 May 2018 3:20 AM GMT (Updated: 12 May 2018 3:20 AM GMT)

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று 34 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தார் நடால். #RafaelNadal

மாட்ரிட் ,

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஜான் மெக்கன்ரோவின் 34 ஆண்டுக்கால சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார் உலகின் முதல்நிலை வீரர் ரஃபேல் நடால்.

முன்னதாக, களிமண் தரை டென்னிஸ் மைதானத்தில் அமெரிக்காவின் ஜான் மெக்கன்ரோ தொடர்ந்து 49 செட்களை குவித்திருந்தார். இந்த சாதனையை அவர் 1984ம் ஆண்டு மாட்ரிட் ஓபன் போட்டியில் நிகழ்த்தி இருந்தார். தொடர்ந்து 34 ஆண்டுகள் இச்சாதனை முறியடிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-3, 6-4 என்ற கணக்கில் அர்ஜென்டினாவின் டிகோ வார்ட்ஸ்மேனை வென்றார். இதன் மூலம் அவர் களிமண் தரையில் தொடர்ந்து 50 செட்களை வென்று மெக்கன்ரோவின் சாதனையை முறியடித்தார்.

மேலும், ‘எனது டென்னிஸ் ஆட்டம் முடிவுக்கு வரும் போது இத்தகைய சாதனைகள் தான் அனைவரது நினைவுக்கும் வரும். இவை பெரிய சாதனைகள். தொடர்ந்து 50 செட்களை வெல்வது என்பது சற்று சிரமமான ஒன்றாகும். ஆனால் நான் செய்து முடித்துள்ளேன்’ என்று நடால் கூறினார்.

கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 16 கோப்பைகளை நடால் வென்றுள்ளார். இதில், களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் தொடரில் மட்டும் 10 முறை (2005-2008, 2010-2014, 2017) கோப்பை வென்று சாதித்துள்ளார். விரைவில் பிரெஞ்ச் ஓபன் தொடர் (மே 27 முதல் ஜூன் 10 வரை) துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story