பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ், ஸ்டீபன்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ், ஸ்டீபன்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 3 Jun 2018 10:00 PM GMT (Updated: 3 Jun 2018 9:10 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஸ்வெரேவ், ஸ்டீபன்ஸ் ஆகியோர் முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஸ்வெரேவ், ஸ்டீபன்ஸ் ஆகியோர் முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஸ்வெரேவ் போராட்டம்

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் நேற்று 4–வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷியாவின் கரென் காச்சனோவுடன் மோதினார். முந்தைய 2 சுற்றுகளை போலவே இந்த முறையும் ஸ்வெரேவ் 5 செட் வரை போராட வேண்டி இருந்தது. 3 மணி 29 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 4–6, 7–6 (4), 2–6, 6–3, 6–3 என்ற செட் கணக்கில் காச்சனோவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் ஸ்வெரேவ் கால்இறுதிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் 2009–ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் கால்இறுதியை எட்டிய இளம் வீரர் என்ற சிறப்பையும் 21 வயதான ஸ்வெரேவ் பெற்றார்.

ஸ்வெரேவ் கால்இறுதி சுற்றில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம்மை எதிர்கொள்கிறார். முன்னதாக டொமினிக் திம் 4–வது சுற்றில் தன்னை சந்தித்த ஜப்பான் வீரர் நிஷிகோரியை 6–2, 6–0, 5–7, 6–4 என்ற செட் கணக்கில் விரட்டியடித்தார்.

ஸ்டீபன்ஸ் அபாரம்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் தன்னை எதிர்த்த மிஹெலா புஜார்னெஸ்குவை (ருமேனியா) 6–1, 6–4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனில் முதல் முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6–2, 6–0 என்ற நேர் செட்டில் அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்தோனியா) பந்தாடியதுடன் கால்இறுதிக்கும் முன்னேறினார். 7–வது முறையாக பிரெஞ்ச் ஓபனில் ஆடும் ஸ்டீபன்ஸ் 4–வது சுற்று தடையை வெற்றிகரமாக கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இன்னொரு ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை யுலியா புதின்ட்சொவா 6–4, 6–3 என்ற நேர் செட்டில் ஸ்டிரிகோவாவை (செக்குடியரசு) வெளியேற்றினார்.

செரீனா–‌ஷரபோவா இன்று மோதல்

பிரெஞ்ச் ஓபனில் இன்று நடக்கும் 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனைகள் செரீனா வில்லியம்சும் (அமெரிக்கா) – மரிய ‌ஷரபோவாவும் (ரஷியா) கோதாவில் இறங்குகிறார்கள். பரம போட்டியாளர்களான இவர்கள் 2016–ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக மோதுவதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இருவரும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் ‌ஷரபோவா 19 ஆட்டங்களில் தோல்வி கண்டு இருக்கிறார். கடைசியாக மோதிய 18 ஆட்டங்களில் செரீனா வசமே வெற்றி கிட்டியிருக்கிறது. 14 ஆண்டுகளாக செரீனாவை வீழ்த்த முடியாமல் தவிக்கும் ‌ஷரபோவா நீண்டகால ஏக்கத்தை தணிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு 36 வயதான செரீனா பங்கேற்றுள்ள முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story