பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ரபெல் நடால், ஷரபோவா கால்இறுதிக்கு முன்னேற்றம்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ரபெல் நடால், ஷரபோவா கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 4 Jun 2018 11:30 PM GMT (Updated: 4 Jun 2018 9:37 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்

பாரீஸ், 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகின் நம்பர் ஒன் வீரரும், 10 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் 70-ம் நிலை வீரர்மேக்ஸ்மிலன் மார்ட்ரெரை (ஜெர்மனி) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) 1-6, 2-6, 7-5, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து 7-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் ரபெல் நடால்-டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் மோதுகிறார்கள்.

இன்னொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னரை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் 16-ம் நிலை வீராங்கனை எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-7 (5-7), 3-6 என்ற நேர்செட்டில் 14-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். வெற்றி பெற்ற டாரியா கசட்கினா கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

இன்னொரு 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)-மரிய ஷரபோவா (ரஷியா) ஆகியோர் மோத இருந்தார்கள். ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் காயம் காரணமாக 36 வயதான செரீனா வில்லியம்ஸ் விலகினார். இதனால் ஷரபோவா விளையாடாமல் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார்.

காயம் குறித்து செரீனா வில்லியம்ஸ் அளித்த பேட்டியில், ‘எதிர்பாராதவிதமாக மார்பக பகுதியில் உள்ள தசை நாரில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முழு உடல் தகுதியுடன் இல்லாததால் என்னால் களத்தில் வலுவாக செயல்பட முடியாது. எனவே போட்டியில் இருந்து விலகினேன். நாளை (இன்று) ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்ய இருக்கிறேன். அத்துடன் காயத்துக்கு சிகிச்சை பெறவும் உள்ளேன். மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தான் காயத்தின் தன்மை குறித்து தெரியும்’ என்று தெரிவித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7-வது இடத்தில் உள்ள கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி கண்டார்.

மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா, உக்ரைன் வீராங்கனை லிசி சுரெங்கோவை சந்தித்தார். இதில் முகுருஜா முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது லிசி சுரெங்கோ காயம் காரணமாக விலகினார். இதனால் முகுருஜா வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

Next Story