பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போராடி வீழ்ந்தார், ஜோகோவிச் பெண்கள் பிரிவில் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் அசத்தல்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போராடி வீழ்ந்தார், ஜோகோவிச் பெண்கள் பிரிவில் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் அசத்தல்
x
தினத்தந்தி 5 Jun 2018 10:30 PM GMT (Updated: 5 Jun 2018 8:44 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலி வீரரிடம் போராடி தோல்வி அடைந்தார்.

பாரீஸ், 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலி வீரரிடம் போராடி தோல்வி அடைந்தார்.

டொமினிக் திம் வெற்றி

பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் 3-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), தரநிலையில் 8-வது இடத்தில் உள்ள டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) மோதினர். ஆக்ரோஷமான ஷாட்டுகள் மூலம் தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய டொமினிக் திம் அடுத்தடுத்து செட்டுகளை தனதாக்கி அசத்தினார்.

ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஸ்வெரேவ், எதிர்ப்பின்றி பணிந்து போனார். டொமினிக் திம் 6-4, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

பின்னர் டொமினிக் திம் கூறுகையில், ‘பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டியிருப்பது வியப்பளிக்கிறது. எனது இளம் வயதில் இந்த மாதிரியான நிலையை அடைவேன் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. இந்த ஆண்டில் மேலும் ஒரு படி முன்னேற வேண்டும்’ என்றார்.

ஜோகோவிச் தோல்வி

மற்றொரு கால்இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 12 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோசிச் (செர்பியா), 72-ம் நிலை வீரர் மார்கோ செச்சினட்டோவுடன் (இத்தாலி) மல்லுகட்டினார்.

முன்னாள் சாம்பியனான ஜோகோவிச், செச்சினட்டோவுடன் தடுமாறினார். முதல் இரு செட்டை இழந்து அதன் பிறகு சற்று மீண்டாலும் 4-வது செட்டில் டைபிரேக்கர் வரை போராடி வீழ்ந்தார்.

3 மணி 26 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் 25 வயதான செச்சினட்டோ 6-3, 7-6 (7-4), 1-6, 7-6 (13-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இத்தாலி வீரர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரைஇறுதிக்கு தகுதி பெறுவது 1978-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

மேடிசன் கீஸ் அபாரம்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் மேடிசன் கீஸ், தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள யுலியா புதின்ட்செவாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார். 1 மணி 24 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, அரைஇறுதிக்கு முன்னேறினார். இதுவரை எந்த செட்டையும் இழக்காத 23 வயதான மேடிசன் கீஸ் பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

ஸ்டீபன்ஸ் கலக்கல்

மற்றொரு கால்இறுதியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கசட்கினாவை விரட்டியடித்தார்.

ஸ்டீபன்ஸ் அரைஇறுதியில் சக நாட்டவர் மேடிசன் கீஸ்சுடன் மோத உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிஆட்டத்தில் சந்தித்து அதில் ஸ்டீபன்ஸ் வெற்றி கண்டது நினைவு கூரத்தக்கது.

போபண்ணா ஜோடி வெளியேற்றம்

ஆண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 6-7 (4-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் நிகோலா மேக்டிச் (குரோஷியா)- அலெக்சாண்டர் பெயா (ஆஸ்திரியா) இணையிடம் தோற்று வெளியேறியது.


Next Story