பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியை எட்டினார், டொமினிக் திம்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியை எட்டினார், டொமினிக் திம்
x
தினத்தந்தி 8 Jun 2018 10:00 PM GMT (Updated: 8 Jun 2018 9:04 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

டொமினிக் திம் வெற்றி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் தரவரிசையில் 8–வது இடத்தில் உள்ள டொமினிக் திம் (ஆஸ்திரியா), 72–ம் நிலை வீரர் மார்கோ செச்சினட்டோவை (இத்தாலி) சந்தித்தார்.

கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்த செச்சினட்டோ, டொமினிக் திம்முக்கு எதிராக கடுமையாக போராடிய போதிலும் நேர் செட்டை தாண்டி ஆட்டத்தை நகர்த்த முடியவில்லை. 2 மணி 17 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் டொமினிக் திம் 7–5, 7–6 (12–10), 6–1 என்ற செட் கணக்கில் வெற்றியை சுவைத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிசுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். இறுதி ஆட்டத்தில் ரபெல் நடால் (ஸ்பெயின்) அல்லது டெல் போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.

பெண்களில் பட்டம் யாருக்கு?

பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ மங்கை சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 10–ம் நிலை வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான ஸ்லோனே ஸ்டீபன்சும் (அமெரிக்கா) இன்று பலப்பரீட்சையில் இறங்குகிறார்கள்.

26 வயதான ஹாலெப் இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது கிடையாது. பிரெஞ்ச் ஓபனில் 2 முறையும் (2014, 2017) ஆஸ்திரேலிய ஓபனில் ஒரு முறையும் (2018–ம் ஆண்டு) இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறார். இந்த முறை தனது கனவை நனவாக்கி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அவரும், ஸ்டீபன்சும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 5–ல் ஹாலெப்பும், 2–ல் ஸ்டீபன்சும் வெற்றி கண்டுள்ளனர். வாகை சூடும் வீராங்கனைக்கு ரூ.17½ கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும்.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் செலக்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story