விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா வோஸ்னியாக்கி வெளியேற்றம்


விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா  வோஸ்னியாக்கி வெளியேற்றம்
x
தினத்தந்தி 4 July 2018 9:30 PM GMT (Updated: 4 July 2018 7:38 PM GMT)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெடரர், செரீனா 3–வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

லண்டன்,

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெடரர், செரீனா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பெடரர் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று 2–வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் லுகாஸ் லாக்கோவை (சுலோவக்கியா) தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார். பெடரர் அடுத்து ஜெர்மனியின் ஜான் லினார்ட் ஸ்டிரப்பை சந்திக்கிறார்.

கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானை 7-6 (4), 7-06 (4), 7-6 (4) என்ற நேர் செட்டில் விரட்டினார். இதே போல் கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), மெக்டொனால்டு, சாம் குயரி (அமெரிக்கா) ஆகியோரும் 2–வது தடையை கடந்தனர்.

செரீனா அபாரம்

பெண்கள் பிரிவில் குழந்தை பெற்றுக் கொண்டு களம் திரும்பியுள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லிம்ஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டோமோவை (பல்கேரியா) பந்தாடினார். வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சபரோவா (செக்குடியரசு), மேடிசன் கீஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோர் தங்களது 2–வது சுற்று ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

அதே சமயம் 2–ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மகரோவா வீழ்த்தினார்.

‌ஷரபோவா ‘அவுட்’

முன்னதாக முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரிய ‌ஷரபோவா நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 7-6 (3), 6-7 (3), 4-6 என்ற செட் கணக்கில் போராடி சக நாட்டவர் விடாலியா டையட்சென்கோவிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 8 நிமிடங்கள் நீடித்தது.


Next Story