விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால், ஹாலெப் வெற்றி


விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால், ஹாலெப் வெற்றி
x
தினத்தந்தி 5 July 2018 9:30 PM GMT (Updated: 5 July 2018 8:29 PM GMT)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடால், ஹாலெப் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

லண்டன்,

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடால், ஹாலெப் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

நடால் அபாரம்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2–வது சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஹோராசியா ஜிபல்லோசை (அர்ஜென்டினா) பந்தாடினார்.

2017–ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான 5–ம் நிலை வீரர் மரின்சிலிச் 6-3, 6-1, 4-6, 6-7 (3), 5-7 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 82–வது இடம் வகிக்கும் அர்ஜென்டினாவின் குடோ பெல்லாவிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 13 நிமிடங்கள் நீடித்தது. இதே போல் இத்தாலி வீரர் தாமஸ் பாபியானோ 7-6 (7), 7-6(6), 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னணி வீரர் வாவ்ரிங்காவுக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்தார்.

ஹாலெப் வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கிளாரி லுவை (அமெரிக்கா) போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த சாய்சாய் ஜெங்கை (சீனா) 7-5, 6-0 என்ற நேர் செட்டிலும், சுலோவக்கியாவின் சிபுல்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஹோகன்னா கோன்டாவையும் (இங்கிலாந்து) தோற்கடித்து 3-வது சுற்றை உறுதி செய்தனர்.


Next Story