ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், சிட்சிபாஸ்


ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நடால், சிட்சிபாஸ்
x
தினத்தந்தி 12 Aug 2018 11:00 PM GMT (Updated: 12 Aug 2018 8:10 PM GMT)

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ‘இளம் புயல்’ சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

டோராண்டோ,

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-6 (3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கரென் காச்சனோவை (ரஷியா) தோற்கடித்தார்.

மற்றொரு அரைஇறுதியில் 27-ம் நிலை வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), 6-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். 2 மணி 47 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சிட்சிபாஸ் 6-7 (4), 6-4, 7-6 (7) என்ற செட் கணக்கில் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். டாப்-10 இடத்திற்குள் உள்ள 4 வீரர்களை சிட்சிபாஸ் தொடர்ச்சியாக வீழ்த்தி மிரள வைத்திருக்கிறார். இதன் மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரில் டாப்-10 இடத்தில் உள்ள 4 வீரர்களை சாய்த்த இளம் வீரர் என்ற சிறப்பை சிட்சிபாஸ் பெற்றார். அவர் முந்தைய ரவுண்டுகளில் முன்னணி வீரர்கள் டொமினிக் திம், விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரை விரட்டியடித்தார்.

சிட்சிபாசுக்கு நேற்று 20-வது வயது பிறந்தது. இந்த வெற்றிகளை நம்ப முடியவில்லை என்றும், ஒரு தொடரில் இதைவிட பெரியதாக சாதிக்க முடியாது என்றும் மகிழ்ச்சி ததும்ப சிட்சிபாஸ் கூறினார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் முதல் 15 இடங்களுக்குள் முன்னேறுகிறார். முதல் சர்வதேச பட்டத்துக்கு குறி வைத்துள்ள சிட்சிபாஸ் இறுதி ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரபெல் நடாலுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

பெண்கள் ஒற்றையரில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியையும், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடப்பு சாம்பியன் ஸ்விடோலினாவையும் (உக்ரைன்) புரட்டியெடுத்தனர்.

மகுடத்துக்கான இறுதிசுற்றில் ஹாலெப், ஸ்டீபன்ஸ் மோதுகிறார்கள். அண்மையில் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ், ஹாலெப்பிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Next Story