ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ரபெல் நடால், சிமோனா ஹாலெப் ‘சாம்பியன்’


ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ரபெல் நடால், சிமோனா ஹாலெப் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 13 Aug 2018 11:15 PM GMT (Updated: 13 Aug 2018 10:15 PM GMT)

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்கள்.


டோராண்டோ,

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), கிரீஸ் நாட்டை சேர்ந்த 20 வயதான ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ்சை சந்தித்தார்.

1 மணி 45 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் சிட்சிபாஸ்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். 32 வயதான ரபெல் நடால் வென்ற 80-வது பட்டம் இதுவாகும்.

வெற்றிக்கு பிறகு ரபெல் நடால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அடுத்த வாரம் நடைபெறும் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் விளையாடவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். எனது உடல் தகுதியை சீராக வைத்து இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எல்லா இடங் களில் நடைபெறும் போட்டியிலும் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். எந்தவொரு போட்டியையும் தவறவிட நான் நினைக்கவில்லை. எனது உடல் தகுதி தான் என்னை போட்டியில் பங்கேற்க முடியாமல் தடுக்கிறது. என்னுடைய சூழ்நிலையை புரிந்து எனது விலகல் முடிவை ஏற்றுக்கொண்ட சின்சினாட்டி போட்டி அமைப்பு குழு இயக்குனருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் இறுதியில் நடைபெறும் அமெரிக்க ஓபன் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு போதிய ஓய்வு தேவைப்படுவதால் ரபெல் நடால் சின்சினாட்டி போட்டியில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா), 3-ம் நிலை வீராங்கனையான ஸ்லோனே ஸ்டீபன்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் சிமொனா ஹாலெப் 7-6 (8-6), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்லோனே ஸ்டீபன்சை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில் சிமோனா ஹாலெப் வென்ற 3-வது பட்டம் இது. ஒட்டுமொத்தத்தில் அவர் பெற்ற 18-வது பட்டம் இதுவாகும்.

வெற்றி குறித்து சிமோனா ஹாலெப் கருத்து தெரிவிக்கையில், ‘உண்மையிலேயே இந்த போட்டியில் நான் சோர்வடைந்து விட்டேன். இந்த வாரம் மிகவும் கடினமாக இருந்தது. இதுபோன்ற போட்டிகளில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் இடையே போதிய இடைவெளி தேவையானதாகும். ஸ்லோனே ஸ்டீபன்சுக்கு எதிராக ஒவ்வொரு முறை விளையாடும் போதும் எனது ஆட்ட திறன் மேம்படுகிறது. என்னை பொறுத்தமட்டில் இது சிறந்த விஷயமாகும். ஸ்லோனே ஸ்டீபன்ஸ் மனரீதியாக வலுப்பெற்று இருக்கிறார். அவர் வலுவான போட்டியாளர்’ என்றார்.

ரோஜர்ஸ் கோப்பை போட்டி முடிவை தொடர்ந்து வெளியிடப்பட்ட உலக தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் முறையே முதல் 2 இடங்களில் தொடருகின்றனர். மார்டின் டெல்போர்டோ (அர்ஜென்டினா) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஒரு இடம் பின்தங்கி 4-வது இடத்தை பெற்றுள்ளார். டிமிட்ரேவ் (பல்கேரியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), மரின் சிலிச் (குரோஷியா), டோமினிச் திம் (ஆஸ்திரியா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் முறையே 5 முதல் 10 இடங்களில் நீடிக்கின்றனர். கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் 12 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். கரோலின் கார்சியா (பிரான்ஸ்) ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும், கிவிடோவா (செக் குடியரசு) 2 இடங்கள் ஏற்றம் கண்டு 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஸ்விடோலினா (உக்ரைன்) 2 இடம் சரிந்து 7-வது இடத்தையும், கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 2 இடம் சறுக்கி 9-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஜூலியா கோர்ஜெஸ் (ஜெர்மனி) 10-வது இடத்தில் தொடருகிறார்.

Next Story