சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் கால்இறுதிக்கு தகுதி


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 17 Aug 2018 10:15 PM GMT (Updated: 17 Aug 2018 8:37 PM GMT)

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் கால்இறுதிக்கு முன்னேறினார்.

சின்சினாட்டி, 

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் கால்இறுதிக்கு முன்னேறினார்.

கால்இறுதியில் மிலோஸ் ராவ்னிக்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் 7–6 (8–6), 6–4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் டெனிஸ் ‌ஷபோவாலோவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 13–வது இடத்தில் இருக்கும் பாப்லோ கார்ரினோ பஸ்டா (ஸ்பெயின்) 6–4, 6–2 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஸ்டீபன்ஸ், கெர்பர் அதிர்ச்சி தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், 3–ம் நிலை வீராங்கனையுமான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6–7 (8–10), 2–6 என்ற நேர்செட்டில் 15–ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டென்சிடம் (பெல்ஜியம்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 4–வது இடத்தில் இருப்பவருமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6–2, 6–7 (3–7), 4–6 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ்சிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

இன்னொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6–4, 3–6, 7–5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். கிவிடோவா (செக் குடியரசு), லிசி சுரென்கோ (உக்ரைன்) ஆகியோரும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்கள். மழையால் பாதிக்கப்பட்டு தொடர்ந்த 2–வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 4–6, 6–3, 6–3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா தாம்ஜனோவிக்கை சாய்த்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார். மழை காரணமாக சில ஆட்டங்கள் மறுநாளைக்கு தள்ளிவைக்கப்பட்டன.


Next Story