டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் + "||" + American Open Tennis Tournament Start Today

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது.
நியூயார்க்,

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி செப்டம்பர் 9-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.


ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சூப்பர் பார்மில் உள்ள விம்பிள்டன் சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்), 20 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் இடையே கடும் போட்டி காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 முறை சாம்பியனான பெடரர் 2008-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபனில் மகுடம் சூடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடால் முதல் சுற்றில் சக நாட்டவர் டேவிட் பெரருடன் சவாலை தொடங்குகிறார். 37 வயதான பெடரர் முதல் ரவுண்டில் ஜப்பானின் நிஷியோகாவுடன் மோதுகிறார். ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), மரின் சிலிச் (குரோஷியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), டொமினிக் திம் (ஆஸ்திரியா), ஜூவான் மார்ட்டி டெல் போட்ரோ (அர்ஜென்டினா), சிட்சிபாஸ் (கிரீஸ்) உள்ளிட்டோரும் கடும் சவால் அளிக்க ஆயத்தமாக உள்ளனர்.

ஒற்றையர் பிரிவில் களம் காணும் ஒரே இந்தியரான யுகி பாம்ப்ரி முதல் சுற்றில் பியரே ஹக்சுடன் (பிரான்ஸ்) மோதுகிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் உள்ள ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் முதல் சுற்றில் கனேபியை (எஸ்தோனியா) எதிர்கொள்கிறார். குழந்தை பெற்றுக்கொண்டு பிறகு களம் திரும்பியுள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) மீண்டும் பழைய நிலையை எட்டிப்பிடிக்க போராடுகிறார். அனுபவம் வாய்ந்த அவரும் பட்டம் வெல்லக்கூடிய வாய்ப்பில் இருக்கிறார். செரீனா முதல் சுற்றில் மாக்டா லினெட்டியை (போலந்து) சந்திக்கிறார். இதே போல் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), நடப்பு சாம்பியன் ஸ்லோனே ஸ்டீபன்ஸ்(அமெரிக்கா), ஸ்விடோலினா (உக்ரைன்), விம்பிள்டன் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), வோஸ்னியாக்கி (டென்மார்க்) உள்ளிட்ட நட்சத்திரங்களும் வரிந்து கட்டுவதால், பெண்கள் பிரிவில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.370 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.26 கோடி பரிசுத்தொகையுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும். 2-வது இடம் பிடிப்போர் ரூ.13 கோடியை பரிசாக பெறுவார்கள்.