அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதலாவது சுற்றில் நடால், செரீனா வெற்றி


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதலாவது சுற்றில் நடால், செரீனா வெற்றி
x
தினத்தந்தி 28 Aug 2018 10:00 PM GMT (Updated: 28 Aug 2018 7:50 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிசில் நடால், செரீனா ஆகியோர் தங்களது முதலாவது சுற்றில் வெற்றி பெற்றனர்.

நியூயார்க், 

அமெரிக்க ஓபன் டென்னிசில் நடால், செரீனா ஆகியோர் தங்களது முதலாவது சுற்றில் வெற்றி பெற்றனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்), சக நாட்டவர் டேவிட் பெரரை எதிர்கொண்டார். இதில் நடால் 6–3 என்ற கணக்கில் முதல் செட்டை வென்று 2–வது செட்டில் 3–4 என்று சற்று பின்தங்கி இருந்த போது பெரர், பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டி முர்ரே தன்னை எதிர்த்த ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தை 6–7 (5), 6–3, 7–5, 6–3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். இதே போல் முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா(சுவிட்சர்லாந்து) 8–ம் நிலை வீரர் டிமிட்ரோவை (பல்கேரியா) 6–3, 6–2, 7–5 என்ற நேர் செட்டில் வெளியேற்றினார். ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), ஜான் இஸ்னர்(அமெரிக்கா), டொமினிக் திம் (ஆஸ்திரியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோரும் முதல் சுற்றை வெற்றிகரமாக கடந்தனர்.

செரீனா அபாரம்

பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 6 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6–4, 6–0 என்ற நேர் செட்டில் மாக்டா லினெட்டியை (போலந்து) விரட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6–1, 7–5 என்ற நேர் செட்டில் ரோடினாவை (ரஷியா) வீழ்த்தினார். வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), அஸரென்கா (பெலாரஸ்), ஸ்விடோலினா (உக்ரைன்), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), ஜூலியா ஜார்ஜஸ் (ஜெர்மனி) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். அதே சமயம் முதலாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப், அமெரிக்க ஓபனில் நான் ஒரு போதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை என்று புலம்பியுள்ளார்.


Next Story