அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, முகுருஜா அதிர்ச்சி தோல்வி


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, முகுருஜா அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 30 Aug 2018 10:00 PM GMT (Updated: 30 Aug 2018 6:49 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆன்டி முர்ரே, முகுருஜா அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

நியூயார்க், 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆன்டி முர்ரே, முகுருஜா அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

முர்ரே வெளியேற்றம்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 3–வது நாளான நேற்று முன்தினம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), பெர்னாண்டோ வெர்டஸ்கோவை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். 3 மணி 23 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் 2012–ம் ஆண்டு சாம்பியனான ஆன்டி முர்ரே 5–7, 6–2, 4–6, 4–6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

நடப்பு சாம்பியன் ரபெல்நடால் (ஸ்பெயின்) தன்னை எதிர்த்த போஸ்பிசிலை (கனடா) 6–3, 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெளியேற்றி 3–வது சுற்றுக்கு முன்னேறினார். வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), டெல் போட்ரோ (அர்ஜென்டினா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகிய முன்னணி வீரர்களும் 2–வது சுற்றில் வெற்றி கண்டனர். ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா), ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) ஜோடி 4–6, 6–3, 6–4 என்ற செட் கணக்கில் பாக்தாதிஸ் (சைப்ரஸ்)–மிஸ்ச்சா ஸ்வெரேவ் (ஜெர்மனி) இணையை தோற்கடித்தது.

செரீனா–வீனஸ்

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வித்தோப்ட்டை (ஜெர்மனி) துரத்தியடித்தார். செரீனா 3–வது சுற்றில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்சுடன் மோத இருக்கிறார். சகோதரிகள் இருவருக்கும் நேருக்கு நேர் மல்லுகட்ட இருப்பது இது 30–வது முறையாகும்.

அதே சமயம் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6–3, 4–6, 4–6 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீராங்கனை கரோலினா முசோவாவிடம் (செக்குடியரசு) மண்ணை கவ்வினார். அஸரென்கா (பெலாரஸ்), நடப்பு சாம்பியன் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) உள்ளிட்டோர் 2–வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய பிரான்ஸ் வீராங்கனை

நியூயார்க் நகரில் தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் வீரர்களும் வதங்கிப் போய்விடுகிறார்கள். வெயில் பிரச்சினையால் இதுவரை 6 வீரர்கள் பாதியில் ஆட்டத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். வெயிலை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர், வீராங்கனைகளுக்கு 10 நிமிடம் ஓய்வு அளிக்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, பிரான்ஸ் வீராங்கனை 28 வயதான அலிஸி கார்னெட், முதலாவது சுற்றின் போது களத்திலேயே தனது பனியனை கழற்றி, அதை அப்படியே திருப்பி போட்டுக் கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்போது அவர் சில வினாடிகள் வெறும் உள்ளாடையுடன் காட்சி அளித்தார். இது விதிமீறிய செயல் என்று கூறிய நடுவர் அவரை அழைத்து கண்டித்தார். அதே சமயம் வீரர்கள் களத்திலேயே தங்களது மேலாடையை மாற்றும் போது, வீராங்கனைகளுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு என்று ஒரு சிலர் சமுக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர். சர்வதேச பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பு, அலிஸி கார்னெட் செய்ததில் தவறு ஏதும் இல்லை. அமெரிக்க ஓபன் டென்னிசின் ஆடைக்கான விதிமுறைகள் கண்டிக்கத்தக்கது என்று கூறியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஓபன் போட்டி குழு வருத்தம் தெரிவித்துள்ளது.


Next Story