அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 3 Sep 2018 11:15 PM GMT (Updated: 3 Sep 2018 10:02 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 7-வது நாளான நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) ஜார்ஜியா வீரர் நிகோலோஸ் பாசிலாஷ்விலியை சந்தித்தார்.

3 மணி 20 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-3, 6-3, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் நிகோலோஸ்சை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 7-5, 7-2, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கால்இறுதியில் டொமினிக் திம், ரபெல் நடாலை சந்திக்கிறார்.

இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 3-6, 6-3, 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக்கை போராடி வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 3 மணி 26 நிமிடம் வரை நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 6-4, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் போர்னா கோரிச்சை விரட்டியடித்து கால்இறுதிக்குள் கால் பதித்தார். கால்இறுதியில் டெல்போட்ரோ, ஜான் இன்னரை எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-0, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் எஸ்தோனியா வீராங்கனை கனேபியை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டென்சை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் லாத்வியா வீராங்கனை செவஸ்தோவா 6-3, 1-6, 6-0 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ்-செவஸ்தோவா மோதுகிறார்கள்.

மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்ட்டியை சாய்த்து கால்இறுதிக் குள் அடியெடுத்து வைத்தார்.



Next Story