டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச் + "||" + American Open Tennis: djokovic at the quarter finale

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதிபெற்றார்.
நியூயார்க்,

பெடரருக்கு அதிர்ச்சி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 8-வது நாளான நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), உலக தரவரிசையில் 55-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மானை சந்தித்தார்.


3 மணி 55 நிமிடம் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 6-3, 5-7, 6-7 (7-9), 6-7 (3-7) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 37 வயதான ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் போட்டியில், உலக தரவரிசையில் ‘டாப்-50’ இடத்துக்கு வெளியே உள்ள வீரரிடம் தோல்வி காண்பது இதுவே முதல்முறையாகும்.

போட்டியின் போது மூச்சு விடவே சிரமமாக இருந்தது - பெடரர்

தோல்விக்கு பிறகு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அளித்த பேட்டியில், ‘போட்டியன்று இரவு வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அத்துடன் போதிய காற்றோட்டமும் இல்லாததால் மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது. இதுபோன்ற கடினமான சீதோஷ்ண நிலையை நான் சந்தித்தது இதுவே முதல்முறையாகும். எனவே புழுக்கமான இந்த சூழலை சமாளிக்க முடியாமல் நான் திணறினேன். வியர்வை அளவுக்கு அதிகமாக கொட்டியதுடன், ஆட்டம் போகப் போக எனது சக்தியையும் இழந்தேன். இதனால் என்னால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் ஜான் மில்மான் இந்த சூழ்நிலையை நன்றாக சமாளித்தார். மிகவும் வெப்பமான பகுதியில் இருந்து அவர் வந்து இருக்கக்கூடும். தோல்வி ஏமாற்றம் அளித்தாலும், போட்டியை முழுமையாக நிறைவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

கால்இறுதியில் ஜோகோவிச்

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 2 முறை சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் உலக தரவரிசையில் 68-வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் வீரர் ஜோவ் ஜோசாவை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-3, 6-2, 7-5 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீரர் பிலிப் கோல்ஸ்கிரீப்பரை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இதேபோல் முன்னாள் சாம்பியனான குரோஷியா வீரர் மரின் சிலிச் 7-6 (8-6), 6-2, 6-4 என்ற நேர்செட்டில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபினை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

ஷரபோவா தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஷரபோவா (ரஷியா) 4-6, 3-6 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீராங் கனை கார்லா நவரோவாவிடம் தோற்று வெளியேறினார். இந்த வெற்றி கார்லா நவரோவாவுக்கு பிறந்த நாள் பரிசாக அமைந்தது. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் சபலென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி கிராண்ட்லாம் போட்டியில் முதல்முறையாக கால்இறுதியை எட்டினார்.

இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் சுலோவாக்கியா வீராங்கனை சிபுல்கோவாவை தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் சுரெங்கோ(உக்ரைன்) 6-7 (3-7), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் மார்கெட்டா வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

போபண்ணா ஜோடி முன்னேற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) ஜோடி 7-6 (8-6), 4-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ஜெர்மி சார்டி- பாப்ரைஸ் மார்ட்டின் இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.