அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா அரைஇறுதிக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 5 Sep 2018 11:30 PM GMT (Updated: 5 Sep 2018 7:47 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 9-வது நாளான நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆஸ்திரேலிய வீரர் டொமினிக் திம்மை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் ஒரு கேமை கூட கைப்பற்றாமல் 0-6 என்ற கணக்கில் சரண்டர் அடைந்த ரபெல் நடால் அதன் பிறகு தனது அனுபவத்தின் மூலம் ஆக்ரோஷமாக விளையாடி அடுத்த 2 செட்களை 6-4, 7-5 என்ற கணக்கில் தனதாக்கி எழுச்சி பெற்றார். 4-வது செட்டை டொமினிக் திம் 7-6 (7-4) என்ற கணக்கில் சொந்தமாக்கினார்.

இதனால் ஆட்டம் 5-வது செட்டுக்கு சென்றது. கடைசி செட்டில் இருவரும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்ததால் ஆட்டம் பரபரப்பானது. டைபிரேக்கர் வரை சென்ற கடைசி செட்டை ரபெல் நடால் 7-6 (7-5) என்ற கணக்கில் போராடி வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 4 மணி 49 நிமிடம் நீடித்தது. அமெரிக்க ஓபன் போட்டியில் அவர் நீண்ட நேரம் ஆடிய ஆட்டம் இது தான்.

வெற்றிக்கு பிறகு ரபெல் நடால் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த ஆட்டம் கடும் போராட்டம் நிறைந்ததாக இருந்தது. சீதோஷ்ண நிலை மிகவும் கடினமாக இருந்தது. டொமினிக்கை நினைத்து வருந்துகிறேன். அவர் திறமையான வீரர். இளம் வீரரான அவர் பட்டம் வெல்ல இன்னும் நிறைய காலம் உள்ளது. அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 2009-ம் ஆண்டு சாம்பியனான அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 6-7 (5-7), 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னரை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 31 நிமிடம் தேவைப்பட்டது. அரைஇறுதிபோட்டியில் ரபெல் நடால்-டெல்போட்ரோ பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். 36 வயதான செரீனா வில்லியம்ஸ் இந்த வெற்றியை எட்ட 1 மணி 26 நிமிடம் மட்டுமே பிடித்தது.

இன்னொரு ஆட்டத்தில் லாத்வியா வீராங்கனை செவஸ்தோவா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்குள் தடம் பதித்தார். இந்த ஆட்டம் 1 மணி 24 நிமிடம் நடந்தது. அரைஇறுதியில் செவஸ்தோவா, செரீனா வில்லியம்சை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) இணை 3-6, 4-6 என்ற நேர்செட்டில் கொலம்பியாவின் செபாஸ்டியன் கேபல்-ராபர்ட் பராக் ஜோடியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

Next Story