அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 10 Sept 2018 5:00 AM IST (Updated: 10 Sept 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா முன்னாள் சாம்பியன் செரீனாவை நேர் செட்டில் தோற்கடித்து முதல்முறையாக பட்டத்தை தட்டிச்சென்றார்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜப்பான் ‘இளம் புயல்’ நவோமி ஒசாகாவுடன் மோதினார்.

செரீனாவின் அனுபவத்துடன் ஒப்பிடும் போது ஒசாகா ஒரு கத்துக்குட்டி, அதனால் செரீனா சுலபமாக வெற்றிக்கனியை பறித்து விடுவார் என்பதே பெரும்பாலானவர்களின் கணிப்பாக இருந்தது. இந்த எண்ணத்தை சிறிது நேரத்திலேயே தகர்த்து எறிந்த ஒசாகா முதல் செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். செரீனாவின் இரு சர்வீஸ்களை முறியடித்து மிரள வைத்த ஒசாகா முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.

இதையடுத்து 2-வது செட்டில் செரீனாவின் ஆக்ரோஷம் எகிறியது. ஒசாகாவின் சர்வீசை பிரேக் செய்த செரீனா இந்த செட்டில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அதன் பிறகு ஒசாகா சரிவில் இருந்து மீண்டு 4-3 என்று முன்னிலை கண்டார்.

இதற்கிடையே விதிமுறைக்கு புறம்பாக நடந்து கொண்ட செரீனாவை நடுவர் எச்சரிக்கை செய்ய, அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவரை வசைமொழிந்த செரீனா, அதற்கு தண்டனையாக ஒரு கேமை இழக்க நேரிட்டது. இதனால் ஒசாகா 5-3 என்று முன்னிலை வகிக்க, இந்த செட்டும் ஒசாகாவுக்கு சொந்தமானது.

சர்ச்சைக்கு மத்தியில் நிறைவடைந்த இறுதிப்போட்டியில் ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை பதம் பார்த்து, முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் மகுடத்தை சூடினார். அத்துடன் ஒற்றையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் ஜப்பானியர் என்ற புதிய சரித்திர சாதனையையும் 20 வயதான ஒசாகா நிகழ்த்தினார். இந்த ஆட்டம் 1 மணி 15 நிமிடங்கள் நடந்தது. வெற்றி உறுதியானதும் பூரிப்பில் அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.

பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு எதிராளிக்கு புள்ளிகளை தாரைவார்க்கும் தானாக செய்யக்கூடிய தவறுகளை 21 முறையும், 6 டபுள் பால்ட்டும் செய்தது செரீனாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

தனது சிறுவயது முன்மாதிரி செரீனா வில்லியம்ஸ் என்று அடிக்கடி கூறி வந்த ஒசாகா, இப்போது தனது குருவையே ஊதித்தள்ளி விட்டார். 1999-ம் ஆண்டு செரீனா வில்லியம்ஸ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இங்கு தான் வென்றார். அப்போது ஒசாகாவின் வயது 1 என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 36 வயதான செரீனா வில்லியம்ஸ், இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் கைப்பற்றி இருக்கிறார். இந்த முறை வென்று இருந்தால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து இருப்பார். அந்த அரிய சாதனை நழுவிப்போய்விட்டது. குழந்தை பெற்றுக் கொண்டு சிறிது காலம் ஓய்வுக்கு பிறகு மறுபிரவேசம் செய்துள்ள செரீனா அதன் பிறகு இன்னும் எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை. விம்பிள்டனிலும் இறுதிசுற்று வரை வந்து தோல்வியை தழுவியது நினைவு கூரத்தக்கது.

வாகை சூடிய ஒசாகா 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளுடன் ரூ.26 கோடியை பரிசுத்தொகையாக அள்ளினார். செரீனாவுக்கு ரூ.13 கோடி கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் ஒசாகா இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 19-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறுகிறார். 2004-ம் ஆண்டு அய் சுஜியாமாவுக்கு பிறகு டாப்-10-க்குள் நுழையும் முதல் ஜப்பான் வீராங்கனை ஒசாகா ஆவார்.

யார் இந்த ஒசாகா?

ஜப்பானின் ஒசாகா என்ற இடத்தில் பிறந்தவர் நவோமி ஒசாகா. ஜப்பான் தாய்க்கும், ஹைதி தீவின் தந்தைக்கும் பிறந்தவர். 3-வது வயதில் அமெரிக்காவின் புளோரிடாவுக்கு இடம் பெயர்ந்த ஒசாகா, அதன் பிறகு இங்கு தான் வசிக்கிறார். ஆனாலும் ஒசாகாவின் வெற்றியை ஜப்பான் நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

ஒசாகா கூறுகையில், ‘அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனாவுடன் விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் கனவு காண்பது உண்டு. அது நனவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்டத்தில் செரீனாவுக்கே ஒவ்வொரு ரசிகர்களும் ஆதரவளித்தனர் என்பதை அறிவேன். ஆனால் போட்டி இந்த மாதிரி முடிந்தது வருத்தம் அளிக்கிறது. களம் இறங்கிய போது, நாம் வித்தியாசமான பெண்மணி, செரீனாவின் ரசிகை கிடையாது, மற்றொரு வீராங்கனையுடன் மோதுகிறேன் என்ற நினைப்புடன் ஆடினேன். ஆனால் ஆட்டம் முடிந்து வலை அருகே வந்து செரீனா என்னை கட்டித்தழுவிய போது, மீண்டும் ஒரு குழந்தை போல் உணர்ந்தேன். இன்னும் சில தினங்களுக்கு பிறகு தான் எனது சாதனையை முழுமையாக உணர முடியும்’ என்றார்.

செரீனா கூறுகையில், ‘நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா வியப்புக்குரிய வகையில் ஆடினார். வெற்றிக்கு அவர் தகுதியானர். இந்த ஆட்டத்தின் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.

Next Story