அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியா வீரர் ஜோகோவிச் ‘சாம்பியன்’


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியா வீரர் ஜோகோவிச் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 10 Sep 2018 11:15 PM GMT (Updated: 10 Sep 2018 10:34 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்தது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் (செர்பியா), உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். மழை காரணமாக மேற்கூரை மூடப்பட்ட நிலையில் இந்த ஆட்டம் அரங்கேறியது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை எளிதில் தனதாக்கினார். அடுத்த செட்டில் இருவரும் மாறி, மாறி புள்ளிகளை சேர்த்ததால் ஆட்டம் டைபிரேக்கர் வரை சென்றது. அதனை ஜோகோவிச் போராடி கைப்பற்றினார். 3-வது செட்டையும் ஜோகோவிச் சொந்தமாக்கினார்.

3 மணி 15 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் 31 வயதான ஜோகோவிச் 6-3, 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்டில் டெல்போட்ரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார். டெல்போட்ரோவுடன் 19-வது முறையாக மோதிய ஜோகோவிச் 15-வது தடவையாக வெற்றி கண்டார்.

ஜோகோவிச் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2011, 2015-ம் ஆண்டுகளில் இந்த பட்டத்தை வென்று இருந்தார். ஒட்டுமொத்தத்தில் ஜோகோவிச் அறுவடை செய்த 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் (ஆஸ்திரேலிய ஓபன்-6, பிரெஞ்ச் ஓபன்-1, விம்பிள்டன்-4, அமெரிக்க ஓபன்-3) இதுவாகும்.

அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்ற வீரர்கள் வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (20 பட்டம்), ஸ்பெயினின் ரபெல் நடால் (17 பட்டம்) ஆகியோருக்கு அடுத்து 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பீட் சாம்ப்ராசின் (14 பட்டம்) சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஷ்லிக் பார்ட்டி (ஆஸ்திரேலியா)-கோகோ வாண்டேவேஜ் (அமெரிக்கா) ஜோடி 3-6, 7-6 (7-2), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் டிமா பாபோஸ் (ஹங்கேரி)-கிறிஸ்டினா மடோனோவிச் (பிரான்ஸ்) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்சுக்கு ரூ.26 கோடி பரிசுத் தொகையுடன், 2 ஆயிரம் தரவரிசை புள்ளியும் கிடைத்தது. 2-வது இடம் பெற்ற டெல்போட்ரோ ரூ.13 கோடியை பரிசாக பெற்றார்.

அமெரிக்க ஓபன் முடிவில் நேற்று வெளியிடப்பட்ட உலக தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் ஆகியோர் முறையே முதல் 2 இடங்களில் மாற்றமின்றி நீடிக்கின்றனர். சாம்பியன் பட்டம் வென்ற செர்பியா வீரர் ஜோகோவிச் 3 இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தையும், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தையும், மரின் சிலிச் (குரோஷியா) ஒரு இடம் ஏற்றம் கண்டு 6-வது இடத்தையும், டிமிட்ரோவ் (பல்கேரியா) ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தையும், டொமினிக் திம் (ஆஸ்திரியா) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) 4 இடம் சரிந்து 9-வது இடத்தையும், ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஒரு இடம் ஏற்றம் கண்டு 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர். அரைஇறுதியில் தோல்வி கண்ட ஜப்பான் வீரர் நிஷிகோரி 7 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) ஆகியோர் முறையே முதல் மற்றும் 2-வது இடத்தில் மாற்றமின்றி தொடருகின்றனர். ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தையும், கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 2 இடம் முன்னேறி 4-வது இடத்தையும், கிவிடோவா (செக்குடியரசு) மாற்றமின்றி 5-வது இடத்தையும், ஸ்விடோலினா (உக்ரைன்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 6-வது இடத்தையும், முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்த நவோமி ஒசாகா (ஜப்பான்) 12 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தையும், கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மாற்றமின்றி 8-வது இடத்தையும், கால் இறுதியில் தோல்வி கண்ட ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6 இடம் சரிந்து 9-வது இடத்தையும், ஆஸ்டாபென்கோ (லாத்வியா) மாற்றமின்றி 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர். இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகாவிடம் தோல்வி கண்ட அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 10 இடங்கள் ஏற்றம் கண்டு 16-வது இடத்தை பிடித்துள்ளார்.


Next Story