டென்னிஸ்

செரீனா வில்லியம்ஸை கிண்டல் செய்து கார்டூன்; ஓவியருக்கு கண்டனம் + "||" + Cartoonist Slammed For Serena Williams Sketch, Featuring US Open Umpire

செரீனா வில்லியம்ஸை கிண்டல் செய்து கார்டூன்; ஓவியருக்கு கண்டனம்

செரீனா வில்லியம்ஸை கிண்டல் செய்து கார்டூன்;  ஓவியருக்கு கண்டனம்
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸை கிண்டல் செய்து மோசமாக, சித்தரித்து கார்டூன் வெளியிட்ட ஓவியருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் முதல் செட்டை பறிகொடுத்து 2-வது செட்டில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் செரீனா மட்டையை மின்னல் வேகத்தில் சுழட்டினார். அப்போது கேலரியில் இருந்த அவரது பயிற்சியாளர் பாட்ரிக் மவுரடோக்லோ, செரீனாவை நோக்கி சில யுக்திகளை சொல்லி கொடுப்பது போல் சைகை காட்டினார். பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனை தெரிவிக்க, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அனுமதி கிடையாது. இதை கவனித்த கள நடுவர் கார்லஸ் ரமோஸ் (போர்ச்சுகல்) இது விதிமீறல் என்று கூறி செரீனாவை எச்சரித்தார்.

 இதனால் ஆத்திரமடைந்த செரீனா நடுவரை நோக்கி கையை நீட்டியபடி கத்தினார். ‘நான் யாரையும் மோசடி செய்தது கிடையாது. ஏமாற்றி வெற்றி பெறுவதற்கு பதிலாக தோற்று விட்டே செல்வேன்’ என்று கொந்தளித்தார். விடாமல் முயன்று வெற்றிப்பாதைக்கு செல் என்பதன் அடையாளமாக பயிற்சியாளர் கட்டை விரலை காட்டினார். மற்றபடி அவர் எந்த ஆலோசனையும் தரவில்லை என்றும் செரீனா கூறினார். அவரது விளக்கத்தை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் பிறகு 5-வது கேமின் போது செரீனா பந்தை வலையில் அடித்து அந்த கேமை இழந்த விரக்தியில் பேட்டை (ராக்கெட்) களத்தில் ஓங்கி அடித்து உடைத்தார். 2-வது முறையாக விதியை மீறிய செரீனாவை நடுவர் மறுபடியும் கண்டித்ததுடன் ஒரு கேமில் 15 புள்ளியை பெனால்டியாக விதித்தார். இதன்படி 6-வது கேமை ஒசாகா 15-0 என்ற கணக்கில் தொடங்கியதுடன், அதே வேகத்தில் 6-வது கேமை தன்னுடையதாக மாற்றினார்.

இதைத் தொடர்ந்து மேலும் கோபமடைந்த செரீனா  நடுவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் செரீனாவின் சீற்றம் எல்லை மீறவே, 3-வது முறையாக எச்சரித்து அவரை தண்டிக்கும் வகையில் ஒரு கேமை ஒசாகாவுக்கு நடுவர் வழங்கினார். இதனால் 4-3 என்ற கணக்கில் இருந்த ஒசாகா 5-3 என்று வலுவாக முன்னிலை பெற்று வெற்றியின் விளிம்புக்கு நகர்ந்தார். இதன் காரணமாக தனது உத்வேகத்தை இழந்த செரீனா கோபத்தின் உச்சிக்கே சென்றார். மறுபடியும் நடுவரை சகட்டு மேனிக்கு திட்டிதீர்த்தார். “என்னிடம் இருந்து நீ ஒரு புள்ளியை திருடி விட்டாய். நீ ஒரு திருடன். பொய்யர். எனது வாழ்க்கையில் நான் யாரையும் ஏமாற்றியதில்லை. நான் விளையாடும் எந்த டென்னிஸ் கோர்ட்டிலும் இனி நீ இருக்கக் கூடாது. என்னிடம் நீ மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கடுமையாக சாடினார்.

அதன் பிறகு மேலும் ஒரு கேமை வென்ற செரீனா 4-5 என்ற கணக்கில் இருந்த போது, உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார். ‘இது நியாயமில்லை.... இது நியாயமில்லை’ என்று நடுவரை நோக்கி கூறியபடி இருந்தார். குழுமியிருந்த 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். மைதானமே பரபரப்பாக காணப்பட்டது. பிறகு போட்டி நடுவர் பிரையன் இயர்லி களத்திற்கு வந்து செரீனாவை சாந்தப்படுத்தினார். அதன் பிறகு தொடர்ந்து ஆடிய செரீனா தோல்வி அடைந்தார். போட்டி முடிந்ததும் ஒசாகாவை கட்டித்தழுவி பாராட்டிய செரீனா, நடுவருடன் கைகுலுக்குவதற்கு மறுத்து விட்டார்.

செரீனா நிருபர்களிடம் கூறுகையில், ‘நடுவர் வழங்கிய பெனால்டியால் தான் ஆட்டம் எனது கையை விட்டு போய் விட்டது. இந்த விளையாட்டில் ஆண்களை விட பெண்களிடம் நடுவர்கள் பாகுபாடு காட்டுகிறார்கள். வீராங்கனைகளுக்கும் சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்களின் உரிமைக்காகத்தான் நான் தொடர்ந்து போராடுகிறேன்’ என்றார்.

நடுவரின் தீர்ப்பில் தவறு இல்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க ஓபன் போட்டி ஒருங்கிணைப்பு குழு, களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட செரீனாவுக்கு ரூ.12¼ லட்சம் அபராதமாக விதித்துள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் ஹெரால்டு சன் நாளேட்டில் செரீனா வில்லியம்ஸை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. ஹெரால்டு சன் நாளேட்டில் பணியாற்றும் மார்க் நைட் என்ற ஓவியர் இந்தக் கார்டூனை  வரைந்திருந்தார். இதில் குண்டான தோற்றத்தில் செரீனா வில்லியம்ஸ் கோபத்தில் குதிப்பது போல வரைந்திருந்தார். 

மேலும், செரீனா வில்லியம்ஸின் உருவத்தையும், அவர் சார்ந்திருக்கும் இனத்தையும் குறிப்பிடும் வகையில் படம் வரைந்திருந்தார் உலகின் மிகச்சிறந்த கார்ட்டூனிஸ்ட்களில் ஒருவராகக் கருதப்படும் மார்க் நைட் இதுபோல் இனவெறியையும், பாலினத்தையும் சுட்டிக்காட்டும் வகையில் கார்டூன் வரைந்துள்ளது பலரின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

டுவிட்டரில் மார்க் நைட்டின் கார்டூனைப் பார்த்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.இது குறித்து ஹாரிபாட்டர் நாவலின் எழுத்தாளர் ரோவ்லிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கார்டூனிஸ்ட் மார்க் நைட்டை கடுமையாக விமர்சித்து கண்டித்துள்ளார். அதில், மிக்சிறந்த வீராங்கனை மீது இனவெறியையும், பாலின பாகுபாட்டை கொண்டுவரும் வகையில் கேலிச்சித்திரம் வரைந்திருக்கிறீர்கள் எனக் கண்டித்துள்ளார். அதேபோல வாஷிங்டன் போஸ்ட் நாளேடு இந்த கார்டூனை, இனவெறியுடன் வரையப்பட்ட கார்டூன் என்று விமர்சித்துள்ளது. இதுபோல் பலரும் கார்டூனிஸ்ட் மார்க் நைட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.