சானியா மிர்சாவுக்கு பிறந்த ஆண் குழந்தையின் பெயர் “இஜான்”


சானியா மிர்சாவுக்கு பிறந்த ஆண் குழந்தையின் பெயர் “இஜான்”
x
தினத்தந்தி 30 Oct 2018 11:00 PM GMT (Updated: 30 Oct 2018 8:10 PM GMT)

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு இஜான் என பெயரிடப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு புகழ் சேர்த்ததில் சானியா மிர்சாவுக்கு தனி இடம் உண்டு. ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையான சானியா இரட்டையர் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் அலங்கரித்து இருக்கிறார். கலப்பு மற்றும் இரட்டையர் பிரிவில் வென்ற 6 கிராண்ட்ஸ்லாம் மகுடத்தையும் சேர்த்து இதுவரை 42 சர்வதேச பட்டங்களை வசப்படுத்தி உள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தொடர்ந்து டென்னிசில் கவனம் செலுத்தினார். காயம் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு எந்த போட்டியிலும் ஆடாத சானியா மிர்சா, ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சானியா மிர்சா ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து சோயிப் மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இதை அறிவிப்பதில் பரவசமடைகிறேன். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், எனது சானியாவும் நலமுடன் உள்ளனர். உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். குழந்தை 3½ கிலோ எடை இருந்தது.

‘பெற்றோர்’ அந்தஸ்தை எட்டியுள்ள சானியா-சோயிப் மாலிக் தம்பதிக்கு சமூக வலைதளம் மூலம் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பெண்கள் அணியின் கேப்டன் மிதாலிராஜ், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அப்ரிடி, முகமது அமிர், இந்தி பட இயக்குனர் பாரா கான் உள்பட பலர் வாழ்த்துகள் கூறியுள்ளனர்.

31 வயதான சானியா, தனது விளையாட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ், குழந்தை பெற்றுக் கொண்டு மறுபடியும் டென்னிசில் அசத்தி வருகிறார். அவரது வழியில் மறுபிரவேசம் செய்வேன் என்றும், 2020-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்பதே இலக்கு என்றும் சானியா ஏற்கனவே கூறியிருப்பது நினைவு கூரத்தக்கது.

‘கடவுளின் பரிசு’

சானியா-மாலிக் தம்பதி தங்களது குழந்தைக்கு, இஜான் மிர்சா மாலிக் என்று பெயர் சூட்டியுள்ளனர். இஜான் என்றால் அரபு மொழியில் ‘கடவுளின் பரிசு’ என்று அர்த்தம். தனது குழந்தையின் பெயருடன் குடும்ப பெயராக ‘மிர்சாமாலிக்’ என்று இணைத்து அழைப்போம் என்று சானியா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story