பாரீஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து கச்சனோவ் ‘சாம்பியன்’


பாரீஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து கச்சனோவ் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 4 Nov 2018 10:30 PM GMT (Updated: 4 Nov 2018 7:30 PM GMT)

பாரீஸ் டென்னிஸ் போட்டியில், ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து கச்சனோவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பாரீஸ்,

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியில் 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (8-6), 5-7, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) வீழ்த்தினார். 2015-ம் ஆண்டுக்கு பிறகு பெடரரிடம், ஜோகோவிச் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஜோகோவிச், உலக தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள ரஷியாவின் காரென் கச்சனோவுடன் மோதினார். இதில் அபாரமாக ஆடிய கச்சனோவ் 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து கோப்பையை தட்டிச்சென்றார். ஆயிரம் தரவரிசை புள்ளிகள் வழங்கப்படும் மாஸ்டர்ஸ் கோப்பையை அவர் ருசிப்பது இதுவே முதல் முறையாகும். இதே போல் இத்தகைய பட்டத்தை ரஷிய வீரர் ஒருவர் வெல்வது 2009-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்தடவையாகும்.

தனது வாழ்க்கையில் இது மிகப்பெரிய வெற்றி என்றும், ஒரு சீசனை இதைவிட மகிழ்ச்சிகரமாக முடிக்க முடியாது என்றும் 22 வயதான கச்சனோவ் குறிப்பிட்டார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்தை பிடிக்கிறார். கச்சனோவ் 11-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.


Next Story