ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ்: ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ‘சாம்பியன்’


ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ்: ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 19 Nov 2018 10:30 PM GMT (Updated: 19 Nov 2018 9:23 PM GMT)

ஏ.டி.பி. டென்னிஸ் இறுதி சுற்று போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஜோகோவிச்சை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.

லண்டன்,

‘டாப்’ 8 வீரர்கள் மட்டும் பங்கேற்ற ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா), 5-வது இடத்தில் இருந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) எதிர்கொண்டார்.

5 முறை சாம்பியனான ஜோகோவிச் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அபாரமாக செயல்பட்டு அவருக்கு அதிர்ச்சி அளித்து புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

1 மணி 20 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் 21 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 31 வயதான ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக உச்சி முகர்ந்தார். இந்த வெற்றியின் மூலம் ஏ.டி.பி.இறுதி சுற்று போட்டியில் 1995-ம் ஆண்டுக்கு (போரிஸ் பெக்கர்) பிறகு சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஜெர்மனி வீரர் என்ற பெருமையை அலெக்சாண்டர் ஸ்வெரேவ் பெற்றார். அத்துடன் 2008-ம் ஆண்டுக்கு (ஜோகோவிச்) பிறகு இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற வீரர் என்ற சிறப்பையும் அவர் தனதாக்கினார். ஒரு ஏ.டி.பி. இறுதி சுற்று போட்டியில் பெடரர், ஜோகோவிச் ஆகிய இருவரையும் ஒருசேர வீழ்த்திய முதல் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ரூ.18 கோடியை பரிசாக பெற்றார். அத்துடன் அவர் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

வெற்றிக்கு பிறகு அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அளித்த பேட்டியில், ‘மிகச்சிறந்த வீரர்களான ரோஜர் பெடரர் (அரைஇறுதி), ஜோகோவிச் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று இருப்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. நம்ப முடியாத மகிழ்ச்சியில் திளைக்கிறேன். எனது வெற்றி குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை. நான் வென்ற மிகப்பெரிய சாம்பியன் பட்டம் இதுதான்’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார். இதற்கு முன்பு அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறியது தான் அவரது சிறந்த செயல்பாடாகும்.

இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மைக் பிரையன்-ஜாக் சோக் ஜோடி 5-7, 6-1, 13-11 என்ற செட் கணக்கில் பிரான்சின் பிர்ரே ஹியூக்ஸ்-நிகோலஸ் ககுட் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


Next Story