டென்னிஸ்

பெண்மையின் வலிமையை பிரசவத்தில் உணர்ந்தேன் - சானியா மிர்சா + "||" + The strength of feminine felt in childbirth - Sania Mirza

பெண்மையின் வலிமையை பிரசவத்தில் உணர்ந்தேன் - சானியா மிர்சா

பெண்மையின் வலிமையை பிரசவத்தில் உணர்ந்தேன் - சானியா மிர்சா
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதக்கங்களை குவிப்பவர். தற்போது தாய்மையின் பரிசான குழந்தையை பெற்றெடுத்து அதனுடன் புதிய வாழ்க்கை அனுபவங்களை பெற்றுக்கொண்டிருக்கிறார்.
கணவர் சோயிப் மாலிக்கும் குழந்தையுடன் பாசத்தை பங்கிடுகிறார். ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் பிறந்த இவர்களது செல்லக் குழந்தை இஷான் கால்முளைத்த ரோஜா போன்று அழகில் கவர்ந்து சானியா மிர்சா குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.

தனது பிரசவ அனுபவங்களையும், வாழ்க்கை ருசிகரங்களையும் சானியா மிர்சா பகிர்ந்து கொள்கிறார்:

எனது பிரசவ அனுபவம் மிக சிறப்பாக இருந்தது. பெண்கள் தங்கள் வலிமையை குறைத்து மதிப்பீடு செய்து வைத்துள்ளனர். பெண்மையின் வலிமை என்ன என்று பிரசவத்தின் போது நான் உணர்ந்து கொண்டேன். எனது பிரசவம் எளிதாகவும், சுமூகமாகவும் இருந்தது.

கர்ப்ப காலத்திலும் நான் உடல் தகுதியை பராமரித்தேன். அப்போதும் டென்னிஸ் விளையாடினேன். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் யோகா பயிற்சி மேற்கொண்டேன். தினமும் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டேன். உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய பயிற்சிகளை செய்தேன். நான் பெண்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். கர்ப்ப காலத்தில் பெண்கள் மிக சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். அது சற்று சிரமமான காரியமாக இருந்தாலும், பெண்கள் உடல் தகுதிக்காக அதை செய்துதான் ஆகவேண்டும். சிறிது தூரம் நடைப்பயிற்சி, சிறிது நேர யோகா பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதோடு, உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். கர்ப்பிணி பெண் களுக்கு உடல் நலமும், மனநலமும் மிகவும் முக்கியம்.

உண்மையில் நாம் சிறப்பான தடகள வீராங்கனைகளை பெற்றுள்ளோம். அனைத்து விளையாட்டுகளிலும் நமது நாடு பெரும் முன்னேற்றங்களை கண்டிருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு இதுபோல் இல்லை. மேலும் பல பெண்கள் விளையாட்டின் மீது தங்களுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தி நாட்டிற்கு தங்கள் பங்களிப்பை செய்யவேண்டும். எனது சாதனைகளில் பெண் வீராங்கனையாக நானும் பெருமை கொள்கிறேன்.

சமூக வலைத்தளங்களை நான் கண்காணிக்கிறேன். ஆனால் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி பரப்பப்படும் செய்திகளை நான் கண்டு கொள்வதில்லை. காலையில் எழுந்தவுடன் நம் மனதை பாதிக்கிற ஒரு செய்தியை பார்த்தால், அந்த செய்தி முழுநாளையும் மோசமானதாக்கி விடும். சிறு வயதிலேயே நான் பிரபலமாகி விட்டதால் இதை எதிர்கொள்வது எனக்கு எளிதாகிவிட்டது. கடந்து வந்த பல வருடங்களில் நான் வலிமை மிக்கவளாகி விட்டேன். நம்மை பற்றி அவதூறு பரப்பும் செய்திகளையும், நம் மனது புண்படும் மாதிரியான செய்தி களையும் கண்டு கொள்ளாமல் தவிர்ப்பதே நல்லது.

நான் விளையாட்டில் என் லட்சியத்தை அடைந்தேன். திருமணமும் செய்துகொண்டேன். இப்போது குழந்தையும் பெற்றிருக்கிறேன். அதனால் தற்கால பெண்களின் வாழ்க்கைக்கு நான் ஒரு முன்னுதாரணம் என்று சொல்கிறார்கள். நான் இன்றைய பெண்களுக்கு சொல்ல விரும்பும் முக்கியமான விஷயம் என்னவென்றால், முதலில் அவர்கள் தங்கள் லட்சியங்களின் மீது நம்பிக்கைவைக்கவேண்டும். பின்பு அந்த லட்சியத்தை நோக்கி பயணிக்கவேண்டும். நம்பிக்கையும், கடுமையான உழைப்பும்தான் நமக்கு வெற்றியைத் தேடித்தரும். எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் குடும்பம் கிடைத்தது என் அதிர்ஷ்டம். விளையாட்டு, திருமணம், தாய்மை போன்றவை எல்லாம் எப்போது வேண்டும் என்று நான் விரும்பினேனோ அப்போது அவை அனைத்தும் நான் விரும்பியபடி கிடைத்தன.

மூட்டு பிரச்சினையால் முதலில் டென்னிஸ் களத்தைவிட்டு நான் விலகி இருந்தேன். இப்போது தாய்மைக்காக விலகியிருக்கிறேன். உடல் நல பிரச்சினைக்காக ஓய்வில் இருந்தபோது, நான் வெறுமையை உணர்ந்தேன். அப்போது சில மாதங்களிலேயே குண மடைந்து களத்திற்கு திரும்பி விட்டேன். பின்பு நாங்கள் குழந்தை பெற்றுகொள்ளலாம் என்று முடிவெடுத்தபோது இந்த நீண்ட இடைவெளிக்காக நான் மனதளவில் தயாரானேன். கர்ப்பமான பின்பும் அவ்வப்போது விளையாடத்தான் செய்தேன்.

இத்தனை ஆண்டுகால டென்னிஸ் விளையாட்டில் எனக்கு நிறைய மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றை நினைவுபடுத்தி கூறுங்கள் என்றால், என்னால் கூறமுடியாது. நான் விளையாட்டில் இருந்து, ஓய்வெடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் நான் என்னை டென்னிஸ் விளையாட பிறந்தவளாகத் தான் கருதுகிறேன். என் வாழ்க்கையில் சிறப்பான தருணங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு முறை பதக்கம் வெல்வதும் சிறப்பான தருணம்தான். நாட்டிற்காக 8 ஆசிய விளையாட்டு பதக்கங்கள் வென்றது, கிராண்ட்ஸ்லாம் மற்றும் உலக தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தது என எல்லாமே எனக்கு சிறப்பான தருணங்கள்தான்.

எங்கள் திருமணத்தின்போது நானும், சோயிப்பும் விளையாட்டுக் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நிறைய அழுத்தங்களை சந்தித்தோம். நாட்டுக்காக விளையாடிய நாங்கள் இருவரும் சாதாரண தம்பதியினரைப் போலவே வாழ விரும்பினோம். பிரபலம் என்பதால் மக்களின் பார்வை எங்கள் மீது விழுந்து கொண்டே இருந்தது. வீட்டில் நாங்கள் சராசரி தம்பதிகள் போலவே வாழ்ந்து வந்தோம். அது வெளியில் உள்ள அழுத்தங்களை சமாளிப்பதற்கு எங்களுக்கு உதவியாக இருந்தது.

குழந்தை பிறந்துவிட்டது. இனி மீண்டும் எப்போது விளையாட வருவேன் என்று இப்போதைக்கு சொல்வதற்கில்லை. எப்போது அது சாத்தியமாகுமோ அப்போது களத்திற்கு திரும்ப திட்டமிட்டுள்ளேன். பிரசவத்திற்கு பின்பு இயல்பான உடல்தகுதியை பெற சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. என்னுடைய முதல் இலக்கு உடல்தகுதியை மீட்டெடுப்பது. இது ஒன்றும் எளிதல்ல. பிரசவத்திற்கு பின் நமது சகஜ வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சிறிது காலம் தேவைப்படதான் செய்யும். எனவே 2020 ஒலிம்பிக்கை எனது இலக்காக நிர்ணயித்துள்ளேன்.

நான் என் கனவுகளை எல்லாம் அடைவதற்கு என் பெற்றோர் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால் அவை எத்தகைய பிரச்சினைகள் என்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் 25 வருடங்களுக்கு முன்பு ஐதராபாத் போன்றதொரு நகரத்தில் இருந்து ஒரு பெண் டென்னிஸ் விளையாட வேண்டும் என்றால் அவளது பெற்றோர் எவ்வளவு தடைகளை கடந்து வந்திருக்க வேண்டும். இவ்வளவையும் கடந்து நான் விம்பிள்டன் பட்டத்தை வெல்லவும் செய்தேன். நானும் என் குடும்பத்தினரும் அடுத்தவர்கள் சொல்வதை சட்டை செய்வதில்லை. ஏனெனில் நாங்கள் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம். எனது வாழ்வின் முக்கியமான கட்டங்களில் எனது பெற்றோர் எனக்கு உறு துணையாக இருந்துள்ளனர். அந்த வகையில் நான் கொடுத்துவைத்தவள்.