மராட்டிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ராம்குமார் வெற்றி
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது.
புனே,
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. 2–வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 132–வது இடத்தில் உள்ள இந்தியாவின் ராம்குமார், 96–ம் நிலை வீரரான மார்செல் கிரானோலர்சுடன் (ஸ்பெயின்) மோதினார். இதில் முதல் செட்டை இழந்த ராம்குமார், அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு 4–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். தமிழகத்தை சேர்ந்தவரான ராம்குமார், அடுத்து துனிசியாவின் மாலெக் ஜாஸிரியை சந்திக்கிறார். கார்லோவிச் (குரோஷியா), பெனோய்ட் பேர் (பிரான்ஸ்) ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.
இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவின் ரோகன் போபண்ணா– திவிஜ் சரண் ஜோடி 6–2, 6–2 என்ற நேர் செட்டில் ராடு அல்போட் (மால்டோவா)– மாலெக் ஜாஸிரி (துனிசியா) இணையை வெளியேற்றியது.