ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால், ஷரபோவா வெற்றி ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால், ஷரபோவா வெற்றி ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 14 Jan 2019 10:45 PM GMT (Updated: 14 Jan 2019 7:32 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால், ஷரபோவா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால், ஷரபோவா ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் காயத்தில் இருந்து மீண்டு வந்தவரான உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-4, 6-3, 7-5 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலிய வைல்டு கார்டு வீரர் ஜேம்ஸ் டக்வொர்த்தை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 6-3, 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் அட்ரியன் மன்னரினோவையும் (பிரான்ஸ்), செக் குடியரசு வீரர் தாமஸ் பெட்ரிச் 6-3, 6-0, 7-5 என்ற நேர்செட்டில் கைல் எட்முன்டையும் (இங்கிலாந்து) வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் (தமிழ்நாடு) 6-7 (7-9), 3-6, 3-6 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோவிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. டிமிட்ரோவ் (பல்கேரியா), மான்பில்ஸ் (பிரான்ஸ்), பெர்னாண்டோ வெர்டாஸ்கோ (ஸ்பெயின்), டிகோ ஸ்வார்ட்ஸ்மன் (அர்ஜென்டினா) ஆகியோரும் தங்கள் முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றியை ருசித்தனர்.

இன்னொரு ஆட்டத்தில் 6 முறை பட்டம் வென்றவரும், நடப்பு சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் டெனிஸ் இஸ்டோமினை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் ஜான் இஸ்னர் (அமெரிக்கா) 6-7(4-7), 6-7 (6-8), 7-6 (7-4), 6-7 (5-7) என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த 97-ம் நிலை வீரர் ரெய்லி ஒபெல்காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். இதேபோல் ஒலிம்பிக் சாம்பியனான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 4-6, 4-6, 7-6 (7-5), 7-6 (7-4), 2-6 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் பாவ்டிஸ்டா அகுத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆன்டி முர்ரே இந்த போட்டியுடன் ஓய்வு பெறக்கூடும் என்று தெரிகிறது. இன்னொரு ஆட்டத்தில் குரோஷியா வீரர் மரின் சிலிச் 6-2, 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் பெர்னார்ட் டோமிச்சை வீழ்த்தினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அலிசன் வான் உய்வான்க்கை(பெல்ஜியம்) சாய்த்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் 2008-ம் ஆண்டு சாம்பியனான ஷரபோவா (ரஷியா) 6-0, 6-0 என்ற நேர்செட்டில் ஹாரிட் டார்ட்டையும் (இங்கிலாந்து), 2017-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை டெய்லர் டவுன்சென்டையும், 2016-ம் ஆண்டு சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் போலோனா ஹெர்காஜையும் (சுலோவேனியா) எளிதில் விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 1-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் மரியா சக்காரியிடம் (கிரீஸ்) வீழ்ந்தார். மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஆஷ்லிக் பார்ட்டி (ஆஸ்திரேலியா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), சபலென்கா (பெலாரஸ்), கிவிடோவா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி கண்டனர்.

Next Story