ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், வோஸ்னியாக்கி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், வோஸ்னியாக்கி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:15 PM GMT (Updated: 16 Jan 2019 7:54 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், வோஸ்னியாக்கி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

மெல்போர்ன்,

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 6 முறை இந்த பட்டத்தை வென்றவரான நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 7-6 (7-5), 7-6 (7-3), 6-3 என்ற நேர்செட்டில் இங்கிலாந்து வீரர் டேனியல் இவான்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் 47-ம் நிலை வீரர் மேத்யூ எப்டெனை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) 6-4, 4-6, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் 39-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் மரின் சிலிச் (குரோஷியா), பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), ஆந்த்ரே செபி (இத்தாலி), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஸ்டீபனோஸ் டிஸ்சிபாஸ் (கிரீஸ்), டிமிட்ரோவ் (பல்கேரியா), தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு), கரன் கச்சனாவ் (ரஷியா), டிகோ ஸ்வார்ட்ஸ்மன் (அர்ஜென்டினா), பெர்னாண்டோ வெர்டாஸ்கோ (ஸ்பெயின்), நிகோல்ஸ் பாசில்லாவிலி (ஜார்ஜியா), தாமஸ் பாபியனோ (இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி, லியாண்டர் பெயஸ் (இந்தியா)-மிகுல் ஏஞ்சல் (மெக்சிகோ) இணை, ஜீவன் நெடுஞ்செழியன் (இந்தியா)-நிகோலஸ் மொன்ரோ (அமெரிக்கா) ஜோடி ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டு நடையை கட்டியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-1, 6-3 என்ற நேர்செட்டில் சுவீடன் வீராங்கனை ஜோஹன்னா லார்சனை எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர்செட்டில் டிமா பாபோஸ்சை (ஹங்கேரி) தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் பிரேசில் வீராங்கனை பிட்ரிஸ்சை விரட்டியடித்தார்.

மற்ற ஆட்டங்களில் ஆஷ்லிக் பார்ட்டி (ஆஸ்திரேலியா), மரியா ஷரபோவா (ரஷியா), அலிக்ஸ்சன்ட்ரா சஸ்னோவிச் (பெலாரஸ்), சபலென்கா (பெலாரஸ்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), கிவிடோவா (செக் குடியரசு), மரியா சக்காரி (கிரீஸ்), பெட்ரா காட்டிச் (குரோஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர். 9-ம் நிலை வீராங்கனை கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 2-வது சுற்றில் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.

முந்தைய நாளில் நடந்த முதல் சுற்று ஆட்டங்களில் வீரர்கள் ஜோகோவிச் (செர்பியா), நிஷிகோரி (ஜப்பான்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), டோமினிக் திம் (ஆஸ்திரியா), வீராங்கனைகள் சிமோனா ஹாலெப் (ருமேனியா), செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் (இருவரும் அமெரிக்கா), நவோமி ஒசாகா (ஜப்பான்), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி கண்டனர்.


Next Story