ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா
x
தினத்தந்தி 17 Jan 2019 10:16 PM GMT (Updated: 17 Jan 2019 10:16 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

மெல்போர்ன், 

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 7-5, 6-4 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் சோங்காவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் 6-7 (4-7), 7-6 (8-6), 7-6 (13-11), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் சுவிர்சர்லாந்தின் வாவ்ரிங்காவை போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டம் 4 மணி நேரம் நீடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-3, 7-6 (8-6), 5-7, 5-7, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் குரோஷியாவின் இவா கார்லோவிச்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான டோமினிக் திம் (ஆஸ்திரியா), ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் பாப்ரினுக்கு எதிரான ஆட்டத்தில் 5-7, 4-6, 0-2 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருக்கையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

மற்ற ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), பாபி போக்னினி (இத்தாலி), பிர்ரே ஹியூக்ஸ் ஹெர்பெர்ட் (பிரான்ஸ்), டெனிஸ் ஷபோவாலோவ் (கனடா), போர்னா கோரிச் (குரோஷியா), அலெக்ஸ் போல்ட் (ஆஸ்திரேலியா), ஜாவ் ஜோய்சா (போர்ச்சுகல்), டானில் மெட்விடேவ் (ரஷியா), பாப்லோ கார்ரினோ பஸ்டா (ஸ்பெயின்), லூகாஸ் பொய்லி (பிரான்ஸ்), பிலிப் கிராஜ்னோவிச் (செர்பியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-3, 6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில் 20 வயதான அமெரிக்க வீராங்கனை சோபியா கெனினை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் கனடாவின் பவுச்சர்ட்டை விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் அலிஸ் கார்னெட்டை (பிரான்ஸ்) வெளியேற்றி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்ற ஆட்டங்களில் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), நவோமி ஒசாகா (ஜப்பான்), கரோலினா பிலிஸ்கோவா (செக் குடியரசு), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), காமிலா ஜியோர்ஜி (இத்தாலி), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), செவஸ்டோவா (லாத்வியா), கியாங் வாங் (சீனா), ஷூய் ஹாங் (சீனா), டிம் பாசின்ஸ்கி (சுவிட்சர்லாந்து) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.


Next Story