ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் - வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் - வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 18 Jan 2019 11:00 PM GMT (Updated: 18 Jan 2019 8:28 PM GMT)

ரோஜர் பெடரர், ஷரபோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், ஷரபோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 7-5, 6-2 என்ற நேர்செட்டில் 50-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் 17-வது முறையாக 4-வது சுற்றுக்குள் நுழைந்து இருக்கும் பெடரர் அடுத்து கிரீஸ் வீரர் சிட்சிபாசை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-1, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை விரட்டியடித்து 4-வது சுற்றை எட்டினார். மரின் சிலிச் (குரோஷியா), தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு), டிமிட்ரோவ் (பல்கேரியா), பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா) ஆகியோரும் 3-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் மரிய ஷரபோவாவுடன் (ரஷியா) மல்லுகட்டினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வோஸ்னியாக்கி 4-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் ஷரபோவாவிடம் வீழ்ந்தார். இதேபோல் 11-ம் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்) 3-6, 2-6 என்ற நேர்செட்டில் 17 வயதான அமன்டா அனிசிமோவாவிடம் (அமெரிக்கா) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். 2000-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த ஒருவர் (அனிசிமோவா) கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 4-வது சுற்றுக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும்.

இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 7-6 (8-6), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சை வெளியேற்றி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இதே போல் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கிவிடோவா (செக் குடியரசு) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 55-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச்சை தோற்கடித்தார்.


Next Story