டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நிஷிகோரி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Australian Open Tennis: Jogovich, Nishikori progress to 4th round

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நிஷிகோரி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நிஷிகோரி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
மெல்போர்ன்,

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 12-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அத்துடன் அவர் இந்த மாத இறுதி வரை நம்பர் ஒன் வீரராக நீடிப்பதை உறுதி செய்தார்.


மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-3, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ‘வைல்டு கார்டு’ வீரர் அலெக்ஸ் போல்ட்டை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்) 7-6 (8-6), 6-1, 6-2 என்ற நேர்செட்டில் போர்ச்சுகல் வீரர் ஜாவ் ஜோய்சாவை வெளியேற்றி 7-வது முறையாக 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் டானில் மெட்விடேவ் (ரஷியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாப்லோ கார்ரினோ பஸ்டா (ஸ்பெயின்), போர்னா கோரிச் (குரோஷியா), லூகாஸ் பொய்லி (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதேபோல் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 4-வது சுற்றில் சிமோனா ஹாலெப்-செரீனா வில்லியம்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

2018-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) தொடக்க சரிவில் இருந்து மீண்டு வந்து 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் சீன தைபே வீராங்கனை சு வெய் ஹிக்கை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 7-6 (7-5), 6-2 என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்தின் டிம் பாசின்ஸ்கியை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி கண்டார். மற்ற ஆட்டங்களில் கரோலினா பிலிஸ்கோவா (செக் குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), செவஸ்டோவா (லாத்வியா) ஆகியோர் வெற்றி கண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், நவோமி ஒசாகா முதலிடத்தில் நீடிப்பு
உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
2. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3. இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், ஒசாகா வெளியேற்றம்
இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஒசாகா ஆகியோர் வெளியேறினர்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்று சாதனைப் படைத்தார்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கிவிடோவாவை வீழ்த்தி ஒசாகா பட்டம் வென்றார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார்.