ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 10:11 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

மெல்போர்ன்,

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், இந்த பட்டத்தை 6 முறை வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டானில் மெட்விடேவை சந்தித்தார்.

3 மணி 15 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-4, 6-7(5-7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் டானில் மெட்விடேவை வீழ்த்தி 10-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் 10 மற்றும் அதற்கு அதிகமாக கால்இறுதிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் நிஷிகோரி, 24-வது இடத்தில் உள்ள பாப்லோ கார்ரினோ பஸ்டாவை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். 5 செட் வரை சென்ற இந்த ஆட்டம் 5 மணி 5 நிமிடம் வரை நீடித்தது. இதில் கடும் போராட்டத்துக்கு பின்பு நிஷிகோரி 6-7 (8-10), 4-6, 7-6 (7-4), 6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் பாப்லோ கார்ரினோ பஸ்டாவை சாய்த்து கால் இறுதிக்குள் 4-வது முறையாக கால் பதித்தார். நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் நிஷிகோரி, ஜோகோவிச்சை சந்திக்கிறார். இருவரும் நேருக்கு நேர் மோதிய 17 ஆட்டங்களில் ஜோகோவிச் 15 முறையும், நிஷிகோரி 2 முறையும் வெற்றி கண்டுள்ளனர்.

அலெக்சாண்டர் அதிர்ச்சி தோல்வி

இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 17-வது இடத்தில் இருக்கும் மிலோஸ் ராவ்னிக் (கனடா) 6-1, 6-1, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் 4-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு (ஜெர்மனி) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 1 மணி 59 நிமிடம் நடந்தது. மிலோஸ் ராவ்னிக் கடந்த 5 ஆண்டுகளில் 4-வது முறையாக கால்இறுதிக்கு தகுதி கண்டுள்ளார். தோல்வி கண்ட அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கோபத்தில் மைதானத்தில் தனது பேட்டை வேகமாக அடித்து உடைத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் போர்னா கோரிச் (குரோஷியா) 7-6 (7-4), 4-6, 5-7, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் 30-ம் நிலை வீரரான லூகாஸ் பொய்லியிடம் தோல்வி கண்டு வெளியேறினார். விறுவிறுப்பான இந்த ஆட்டம் 3 மணி 15 நிமிடம் நடந்தது. கால்இறுதியில் மிலோஸ் ராவ்னிக்-லூகாஸ் பொய்லி மோதுகிறார்கள்.

செரீனா வில்லியம்ஸ் அசத்தல்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) சந்தித்தார். 1 மணி 47 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை விரட்டியடித்து 13-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் கரோலினா பிலிஸ்கோவா (செக்குடியரசு) 60 நிமிடத்தில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் செரீனா வில்லியம்ஸ்-கரோலினா பிலிஸ்கோவா மோதுகிறார்கள்.

நவோமி ஒசாகா வெற்றி

இன்னொரு ஆட்டத்தில் 2018-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) தொடக்க சரிவில் இருந்து மீண்டு 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீராங்கனையான செவெஸ்டோவாவை (லாத்வியா) வெளியேற்றி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினா 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீசை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் நவோமி ஒசாகா-எலினா ஸ்விடோலினா சந்திக்கிறார்கள்.

Next Story