டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நடால், கிவிடோவா + "||" + Australian Open Tennis: In the semi-final Natal, kvitova

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நடால், கிவிடோவா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நடால், கிவிடோவா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடால், செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் 15-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ், ஸ்பெயினின் பாவ்டிஸ்டா அகுத்தை எதிர்கொண்டார். 4-வது சுற்றில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி அளித்த சிட்சிபாஸ், இந்த ஆட்டத்திலும் அமர்க்களப்படுத்தினார். 22 ஏஸ் சர்வீஸ்கள் போட்டு மிரட்டிய சிட்சிபாஸ் 7-5, 4-6, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் அகுத்தை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.2003-ம் ஆண்டு, அமெரிக்காவின் ஆன்டி ரோட்டிக் ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதியை எட்டிய போது, அவரது வயது 20 ஆண்டு 149 நாட்கள். அதன் பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் குறைந்த வயதில் அரைஇறுதியை எட்டிய வீரர் என்ற சிறப்பை சிட்சிபாஸ் பெற்றுள்ளார். சிட்சிபாசின் தற்போதைய வயது 20 ஆண்டு 168 நாட்கள்.


சிட்சிபாஸ் அரைஇறுதியில் 2-ம் நிலை வீரரும், முன்னாள் சாம்பியனுமான ரபெல் நடாலை (ஸ்பெயின்) சந்திக்கிறார். முன்னதாக நடால், கால்இறுதி சுற்றில் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் பிரான்சிஸ் டியாபோவை (அமெரிக்கா) எளிதில் தோற்கடித்தார். ஆஸ்திரேலிய ஓபனில் நடால் அரைஇறுதியை அடைந்திருப்பது இது 6-வது முறையாகும்.

பெண்களுக்கான கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-1, 6-4 என்ற நேர் செட்டில் உள்ளூர் நட்சத்திரம் ஆஷ்லே பார்ட்டியை பந்தாடி, 2-வது முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். கிவிடோவாவின் வெற்றியின் மூலம், 4-வது சுற்றுடன் வெளியேற்றப்பட்ட சிமோனா ஹாலெப்பின் (ருமேனியா) ‘நம்பர் ஒன்’ இடம் பறிபோனது. அதாவது இப்போது ஹாலெப்பின் தரவரிசை புள்ளிகளை கிவிடோவா கடந்து விட்டார். ஆனாலும் கிவிடோவாவுக்கு ‘நம்பர் ஒன்’ அரியணை கிடைக்கும் என்று இப்போதே உறுதியாக சொல்ல முடியாது. ஆஸ்திரேலிய ஓபன் முடிவுக்கு பிறகே யார் ‘நம்பர் ஒன்’ என்பது தெளிவாகும். ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு கிவிடோவா, நவோமி ஒசாகா (ஜப்பான்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 35-வது இடம் வகிக்கும் டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா) 2-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவை (ரஷியா) சாய்த்தார். ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்பாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் பிரதான சுற்றில் எந்த ஒரு வெற்றியும் பெறாமல் 5 முறை முதல் சுற்றுடன் வெளியேறி இருந்த டேனியலி காலின்ஸ், இப்போது அரைஇறுதிக்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். காலின்ஸ் அடுத்து கிவிடோவாவுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறார்.

கலப்பு இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை சமந்தா ஸ்டோசுர் ஜோடி தோல்வி அடைந்தது. இவர்களை, அன்ன-லெனா குரோனிபெல்டு (ஜெர்மனி)-ராபர்ட் பாரா (கொலம்பியா) ஜோடியினர் 4-6, 6-4 (10-8) என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.