ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் கிவிடோவா-ஒசாகா ஆண்கள் ஒற்றையரில் நடால் அபாரம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் கிவிடோவா-ஒசாகா ஆண்கள் ஒற்றையரில் நடால் அபாரம்
x
தினத்தந்தி 24 Jan 2019 11:15 PM GMT (Updated: 24 Jan 2019 8:34 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிவிடோவா, ஒசாகா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் பிரிவில் நடாலும் இறுதி சுற்றை எட்டியிருக்கிறார்.

மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), டேனியலி காலின்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார். கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் முதல் செட்டில் இருவரும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவது போல் தெரிந்தது. 4-4 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த போது, வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. அந்த சமயம் 40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்ததால் வீராங்கனைகள் மட்டுமின்றி ரசிகர்களும் சோர்ந்து போனார்கள். இதையடுத்து மேற்கூரை மூடப்பட்டு போட்டி தொடர்ந்தது. முதல் செட்டை டைபிரேக்கர் வரை போராடி வசப்படுத்திய இடக்கை நட்சத்திரமான கிவிடோவா, 2-வது செட்டில் காலின்சை நடுங்க வைத்தார். எதிராளிக்கு ஒரு கேமை கூட விட்டுக்கொடுக்காமல் 3 சர்வீஸ்களை ‘பிரேக்’ செய்த கிவிடோவா இந்த செட்டை எளிதில் தனதாக்கினார்.

1 மணி 34 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் கிவிடோவா 7-6 (7-2), 6-0 என்ற நேர் செட் கணக்கில் காலின்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நடப்பு தொடரில் எந்த ஒரு செட்டையும் இழக்காத கிவிடோவா ஆஸ்திரேலிய ஓபனில் இறுதி சுற்றை எட்டுவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் 1991-ம் ஆண்டு ஜானா நவோட்னாவுக்கு பிறகு இங்கு இறுதிப்போட்டிக்கு வந்த முதல் செக்குடியரசு வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.

2 முறை விம்பிள்டன் சாம்பியனான கிவிடோவாவுக்கு 2016-ம் ஆண்டு டிசம்பரில் கத்திகுத்து விழுந்தது. வீட்டுக்குள் நுழைந்த திருடன், அவரது இடது கையை கத்தியால் குத்தி கிழித்து விட்டு தப்பியோடினான். காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்டு 6 மாதம் ஓய்வில் இருந்த கிவிடோவா, மறுபிரவேசம் செய்த பிறகு, மீண்டும் பழைய நிலையை எட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

வெற்றிக்கு பிறகு 28 வயதான கிவிடோவா கூறுகையில், ‘உள்விளையாட்டு அரங்கில் விளையாடுவதையே நான் விரும்புவேன். மேற்கூரை மூடப்பட்டது எனக்கு கொஞ்சம் உதவிகரமாக இருந்தது. திறந்தவெளியில் ஆட்டம் தொடர்ந்து நடந்திருந்தால் இன்னும் அதிகமாக போராடி இருப்பேன்’ என்றார்.

மேற்கூரை மூடப்பட்டதால் அதிருப்திக்குள்ளான டேனியலி காலின்ஸ் கூறுகையில், ‘வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், வெயிலுக்கு மத்தியில் ஆடுவதே எனக்கு பிடிக்கும். அப்படிப்பட்ட சூழலில் தான் வளர்ந்தேன். உள்விளையாட்டு அரங்க போட்டி முற்றிலும் வித்தியாசமானது’ என்று குறிப்பிட்டார்.

கிவிடோவா நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் 4-ம் நிலை வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான ஜப்பானின் நவோமி ஒசாகாவுடன் மோதுகிறார். முன்னதாக ஒசாகா அரைஇறுதியில், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் ஒசாகா 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வெளியேற்றி ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். ஒசாகா 15 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

21 வயதான ஒசாகா கூறுகையில், ‘பிளிஸ்கோவாவுடன் நான் பலமுறை மோதியிருக்கிறேன். அதில் பலதடவை தோற்றும் இருக்கிறேன். அதனால் இந்த ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். முடிவை பற்றி கவலைப்படாமல் முடிந்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்குள் கூறிக்கொண்டு ஆடினேன். சமாளித்து வெற்றியும் கண்டு இருக்கிறேன்’ என்றார்.

கிவிடோவா, ஒசாகா ஆகியோரில் யார் மகுடம் சூடுகிறார்களோ அந்த வீராங்கனை தரவரிசையில் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடிப்பார்கள்.

ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரும், முன்னாள் சாம்பியனுமான ரபெல் நடால், 15-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார். 4-வது சுற்றில் ஜாம்பவான் ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி அளித்த சிட்சிபாஸ், அரைஇறுதியிலும் ஆக்ரோஷமாக ஆடி நடாலுக்கு ‘சோதனை’ கொடுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனுபவம் வாய்ந்த ரபெல் நடால் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட்டில் சிட்சிபாசை பந்தாடினார். நடாலின் எந்த ஒரு சர்வீசையும் முறியடிக்க முடியாமல் திண்டாடிய சிட்சிபாஸ் வெறும் 1 மணி 46 நிமிடங்களில் நடையை கட்டினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 25-வது முறையாகும்.

2-வது அரைஇறுதியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- லுகாஸ் போலே (பிரான்ஸ்) இன்று மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறும் வீரரை இறுதிப்போட்டியில் நடால் சந்திப்பார்.

Next Story